Thursday 31 July 2008

மத்திய கிழக்கிற்குப் பணிப்பெண்கள் செல்வதை நிறுத்த விசேட திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் புரியச் செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் கணிசமான அளவு குறைத்துவிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்; தெரிவித்தது.

அதற்கு மாற்றீடாக நன்கு பயிற்றப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களை கனடா, அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை யொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவே மேற்படி தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-

“இலங்கை நாட்டவர்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கே தொழில் தேடிச் செல்கின்றனர். அங்கு செல்கின்ற வீட்டுப் பணிப்பெண்கள் அதிக துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் வேலை செய்யும் வீடுகளில் நடக்கும் கொடுமைகள் வெளியில் வருவதில்லை.

பிரச்சினைகளுக்குள்ளாகும் அதிகமான பணிப்பெண்கள் தினமும் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் தஞ்சம் புகுகின்றனர்.

இந்த நிலையைத் தடுத்து நிறுத்தி பயிற்றப்பட்ட ஆண்ää பெண் தொழிலாளர்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் தொழிலாளர்கள் நல்ல நிலையை அடைவர்.

அதன் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் குறைத்துவிட நாம் தீர்மானித்திருக்கிறோம்.

மாறாக, பயிற்றப்பட்ட தொழிலாளர்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.”

No comments: