Thursday, 31 July 2008

வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானியாவில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

பிரித்தானியாவிலுள்ள கல்லூரிகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய உள்விவகார அமைச்சு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய உள்விவகார அமைச்சின் கீழ் செயற்படும் எல்லை முகவர்கள் மூலம் வழங்கப்படும் அனுமதியைப் பெற்ற கல்லூரிகள் மாத்திரமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை முகவர்களின் அனுமதிபெற்ற கல்லூரிகள் தமது கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுசரணை வழங்க வேண்டும் எனவும், கல்வி நிலையங்கள் தமது நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் காட்டவேண்டும் எனவும் பிரித்தானிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குடிவரவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் போதியளவு புள்ளிகளைப் பெற்றால் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய விதிமுறையும் அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு, உயிரளவை கொண்ட அடையாள அட்டைகளும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அனுமதி முறை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் எனவும், புத்தாக்கல் திறன் மற்றும் பல்கலைக்கழகங்கள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்திருக்கும் கல்விப் பயிற்சி வழங்குனர்களின் பதிவுகள் மீளப்புதுப்பிக்கப்படவிருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

போலியான கல்வி நிலையங்களை நீக்குவது தொடர்பான சட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது நடைமுறையில் இல்லையெனவும் கூறப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட 2000 கல்லூரிகளில் 2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 256 கல்லூரிகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 124 கல்லூரிகள் பாதியளவில் அல்லது முழு அளவில் செயற்படமுடியாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரித்தானியாவுக்கு பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கின்றபோதும், நல்ல மாணவர்களே தமக்குத் தேவைப்படுவதாக புதிய நடைமுறை தொடர்பாகத் தெரிவிக்கும் அறிக்கையில், பிரித்தானிய உள்விவகார மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் லியாம் மைரென் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இந்தப் புதிய விதிமுறைகளை கல்லூரிகள் வரவேற்றிருப்பதாக பி.பி.சி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் கல்விபயில விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வி தொடர்பான பதிவுகள் உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதுடன், அனுசரணையாளரின் விபரங்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: