Sunday 27 July 2008

சிறிலங்காவுக்கு அண்மையாக இந்திய போர்க் கப்பல்கள்

சிறிலங்கா கடற்பரப்புக்கு அண்மையாக இந்திய கடற்படையின் இரு போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரண்வீர், ஐஎன்எஸ் மைசூர் ஆகியன சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிற்கின்றன.

கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியே இக்கப்பல்கள் சிறிலங்காவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளன.

இந்திய கப்பல்கள் சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ள போதும், சிறிலங்கா கடற்படையினர் சிறிலங்கா கடற்பரப்பில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகவும் அவசரமான நிலமைகளிலேயே இந்திய கடற்படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் சுற்றுக்காவல் படகுகள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகள் என்பன பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன.

சார்க் உச்சி மாநாடு நிறைவுபெறும் வரை அவை காவலில் ஈடுபட்டுவரும் என தெரிவித்துள்ளன.

ஐஎன்எஸ் மைசூர் போர்க்கப்பல் டில்லி-வகையை (Delhi-class destroyer) சேர்ந்த நாசகாரி கப்பலாகும்.

6,900 தொன் எடை கொண்ட இக்கப்பல் 360 சிப்பந்திகள் மற்றும் படையினரைக் கொண்டது. அணுசக்தி, இராசாயண, உயிரியல் ஆயுதங்களின் தாக்குதல் சூழ்நிலைகளை இக்கப்பல் சமாளிக்கும் தன்மை கொண்டது.

ஐஎன்எஸ் ரண்வீர் போர் கப்பல் ராய்புட் வகையை சேர்ந்தது (Rajput-class destroyer) நாசகாரி கப்பலாகும்.

இக்கப்பலில் சீ கிங் மற்றும் செல்ரக் ரக உலங்குவானூர்திகள் தரித்து நிற்கக்கூடியவை.

இந்தியாவின் தமிழ்நாட்டின் கரையோரத்தின் ராம்நாட் பகுதியில் உள்ள படைத்தளங்களும் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடற்படையினரின் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினரும் தமது கடல் கண்காணிப்புக்களை பலப்படுத்தி உள்ளனர்.

சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொகுதியில் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள், அதிவேக தாக்குதல் டோரா படகுகள், உட்கரையோர நீருந்து விசைப்படகுகள், அதிவேக பீரங்கி படகுகள் என்பவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படகு தாக்குதல் ஸ்குவாட்ரன் படையினரும் அடங்கியுள்ளதாக கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடவடிக்கை படகு தாக்குதல் ஸ்குவாட்ரன் படையினரின் இரண்டு குழுவினர் நீரேரிகளிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் ஐந்து படகுகளைக் கொண்ட இந்த குழுவினர் தியவன்னா ஓயா மற்றும் பைரா வாவிகளில் காவலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: