திருகோணமலை உவர்மலை கோணேஸ்வரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திருகோணமலை மேன்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிரிக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 7 வயதுச் சிறுமி கடைக்குச் சென்றிருந்த வேளை, அவரைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று மறைவிடம் ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதனை மதகுரு ஒருவரும், கடைச்சிப்பந்தியும் கண்டு கூக்குரலிட்டதையடுத்து, அங்கு ஓடிவந்த கிராம மக்கள் எதிரியைப் பிடித்து மின்கம்பம் ஒன்றில் கட்டிவைத்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு எதிராகச் சிறுமியைக் கடத்தியமை; அவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை என இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது,
கடைக்குச் சென்ற தன்னைப் பிடித்து ஒரு கையால் வாயைப் பொத்தி மறுகையால் தூக்கிச் சென்று ஒரு வேப்பமரத்தடியில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் முடிவில் ஆட்கடத்தல் ; சிறுமி மீது மோசமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டு குற்றங்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா தண்டமும் விதித்து மேன்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இரண்டு குற்றங்களுக்குமான சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் எதிரி அனுபவிப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, எதிரி 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றித் திருகோணமலைக்கு மேன்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள நீதிபதி எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேன்நீதிமன்றத்தில் வழங்கிய முதலாவது வழக்குத் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment