Tuesday, 29 July 2008

90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவலில் தடுத்து வைப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தெரிவிப்பு

பொலிஸாரால் கைது செய்யப்படும் ஒருவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவல் உத்தரவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்பவரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

14-9-2007 அன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தியாகராஜா மோகனரூபன் கடந்த 11 மாதங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கைதும் தடுத்து வைப்பும் சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய சட்டத்தரணி மூலம் சத்தியக் கடதாசியை கையொப்பம் இட அனுமதி கோரிய போதும் அதற்கு புலனாய்வு பிரிவின் அத்தியட்சகர் அனுமதி வழங்கினார்.

ஆனால், அதன் பொறுப்பதிகாரி அனுமதி வழங்க மறுத்ததையடுத்து சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் 1ஆம் பிரதிவாதியாக பிரசன்னா டி அல்விஸ் பொறுப்பதிகாரி பயங்கரவாத பிரிவு, 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் பிரதிவாதிகளாக அதன் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு இருந்தனர்.

No comments: