Monday 28 July 2008

சிறீலங்காவை இருளில் மூழ்கடிப்பதற்கு இந்தியா தயாராகிவருகிறது - ஜே.வி.பி

மகிந்தவின் ஆட்சியில், சிறீலங்காவை இருளில் மூழ்கடிப்பதற்கு இந்தியா தயாராகி வருவதாக, ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இன்று கொழும்பில் செய்தியாளர்களின் மத்தியில்
கருத்துரைத்திருக்கும், ஜே.வி.பியின் பரப்புரைச் செயலர் விஜித்த
ஹேரத், நாசகார நிகழ்ச்சித் திட்டத்துடன், சிறீலங்காவின் உள்ளகப்
பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


“மகிந்த ராஜபக்~வின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்காவில்
இந்தியாவின் தலையீடு மேலோங்கி வருகின்றது. முன்னாள் அதிபர்
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் இருந்ததை விட,

இப்பொழுது இந்தியாவின் தலையீடு அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த
காலத்தில், சிறீலங்காவில் படைவழியில் மட்டும் தலையீடுகளை
இந்தியா மேற்கொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது சிறீலங்காவின்
பொருளாதாரத்தை வசப்படுத்தும் வகையில், இந்தியாவின்
தலையீடுகள் அமைந்துள்ளன.

அனல்மின் நிலையத்தை நிறுவப் போவதாகக் கூறிக் கொண்டு,
திருமலை சம்பூர் பிரதேசத்தை சிறப்பு பொருண்மிய வலயமாக
இந்தியா வசப்படுத்தியுள்ளது. இதேபோன்று, எரிபொருள் வள
அகழாய்வு நடவடிக்கைகள் என்ற போர்வையில், மன்னார்
வளைகுடாவில் இந்தியா கால்பதித்துள்ளது.


இதனை விட, திருமலை புல்மோட்டையில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவதற்கும், இந்தியா தயாராகி வருகின்றது. இவற்றுக்கு சிகரம் வைப்பது போன்று, பொருளாதார உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி,
சிறீலங்காவின் பொருளாதாரத்தின் மீதான தனது பிடியை
இறுக்குவதற்கு, இந்தியா முற்படுகின்றது.

இந்தியாவிடம் இருந்து, கடலடி இணைப்புக்கள் ஊடாக
மின்சாரத்தைப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் முற்படுவது
ஆபத்தானது. சிறீலங்காவின் மின்சார வழங்கல்களை இந்தியா
கட்டுப்படுத்துவதற்கு இது வழிகோலக்கூடும்.

தேவையேற்படும் பட்ச்த்தில் சிறீலங்காவை இருளில் மூழக்டிப்பதற்குக்கூட இந்தியா தயங்காது. இந்த வகையில், இந்தியாவில் இருந்து மின்சாரத்தைப்
பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது,
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றது.

இந்தியாவின் இவ்வாறான நடவடிக்கைகள், பன்னாட்டு
விழுமியங்களுக்கு முரணாக அமைந்துள்ளன. இவற்றை எமது கட்சி
ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

இவ்வாறான நாசகார நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதை, இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, நாம் அழைப்பு விடுக்கின்றோம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் பரப்புரை செயலர் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments: