கொழும்பில் நடைபெறும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கட்சித் தலைவர் ரவூவ் ஹக்கீம் தலைமையிலான நால்வர் அடங்கிய குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை, இந்தியப் பிரதமருக்கு விளக்கிக்கூற எதிர்பார்த்திருப்பதாகவும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை முன்வைப்பதன் அவசியத்தை மன்மோன் சிங்குடனான சந்திப்பில் வலியுறுத்தவிருப்பதாகவும் ஹசன் அலி கூறியுள்ளார்.
“இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு இருக்கவேண்டும். இரண்டு இனங்களிலும் பெறுமதியான உயிர்கள் இழக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முடிவொன்றை எதிர்பார்த்துள்ளனர். மக்களைப் பாதுகாப்பதற்கு யாராவது முன்வரவேண்டும்” என முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் அந்த ஊடகத்திடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
13வது திருத்தச்சட்டமூலத்துக்கு மேலான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டிருக்கும் ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது தோன்றியிருக்கும் நிலைமைகள் குறித்தும் மன்மோகன் சிங்கிற்கு எடுத்துக்கூற எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை வரும் இந்தியப் பிரதமரைச் சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென கொழும்பு தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை வரும் இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில், கிழக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்புக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லையெனவும், பிள்ளையானை மன்மோகன் சிங் சந்திப்பதற்கு அரசாங்கத்திலிருக்கும் சிலர் விரும்பவில்லையெனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment