Monday 28 July 2008

ஐ.தே.கட்சியுடன் உடன்பாட்டுக்கு வந்ததன் பின்னரே த.தே.கூட்டமைப்பை அழைக்க முடியும்-சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுத் தலைவர்

வடக்குக் கிழக்குப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுப்பொதி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பொதுவான உடன்பாட்டுக்கு வந்ததன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு அழைக்க முடியும் என குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரவித்துள்ளார்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பு அங்கம்வகிக்காத சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முழுமையற்றது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலுடன் தொடர்புபட்ட விடயங்களில், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் 90 வீதம் பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியும் குழுவில் மீண்டும் இணைந்துகொண்டு உடன்பாட்டுக்கு வருமானால் எஞ்சியுள்ள 10 வீதமும் பூரணப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்பொழுதுள்ள கட்சிகளுடனான விவகாரங்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுப்போம். இந்த நாட்டின் இரண்டு பெரிய அரசியல்கட்சிகளிடையே பொதுவான உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்துவோம். அவ்வாறன்றி, விடுதலைப் புலிகளின் அழுத்தங்களுக்கமைய செயற்படும் ஒரு கட்சியை குழுவில் இணைத்துக்கொள்ள நான் தயாரில்லை" என்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடமும் தான் விளக்கிக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எப்படியிருப்பினும், நான் ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அந்த நேரம் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: