மடு தேவாலயத்தை விரைவில் ஆலய நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட மன்னார் தேவாலயத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
மடு தேவாலயத்தில் தங்கவிருக்கும் குருமாரின் பெயர் விபரங்களை வழங்குமாறு இராணுவத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், பெயர் விபரங்கள் வழங்கப்பட்ட பின்னரே மடு தேவாலயம் தம்மிடம் ஒப்படைக்கப்படும் என இராணுவத்தினர் கூறியதாகவும் குரு முதல்வர் விக்டர் சோசை ஐ.என்.எல்.லங்கா இணையத்துக்குத் தெரிவித்தார்.
எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படும் ஆவணி மாதத் திருவிழாவை கொண்டாட முடியாதெனத் தெரிவித்த விக்டர் சோசை, மடு தேவாலயம் விரைவில் இராணுவத்தினரால் தம்மிட்டம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.
மடு தேவாலயப் பகுதி இராணுவத்தினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத் தளபதியின் உத்தரவுக்கமைய இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.5 மில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினர் மடு தேவாலயத்தைப் புனரமைத்திருந்தனர்.
புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் வன்னி மாவட்டக் கட்டளைத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் அழைப்பையேற்றே மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினர் நேற்று மடு தேவாலயத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் பிந்திய நிலைவரம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக மன்னார் ஆயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் வாழ்ந்துவரும் மக்களின் நிலைமைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அரசாங்கத் தரப்பினருடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மடு தேவாலய வளாகத்தில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment