Monday 28 July 2008

கடத்தல் அல்ல, கைதுகளே இடம்பெறுகின்றன- பசில் ராஜபக்ஷ

இலங்கையில் கடத்தல்கள் இடம்பெறுவதில்லையெனவும், விசாரணைகளுக்கென பொலிஸாரால் அழைத்துச்செல்லப்படுவதே கடத்தல்கள் என ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டால் அடுத்த நிமிடம் அவர் கடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுவதாக கொழும்பு வாராந்தப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அவர் பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்டார் என்ற செய்தி இறுதியாகவே வெளியிடப்படும் எனக் கூறினார்.

ஒருவரை கைதுசெய்து தடுத்துவைத்து விசாரித்து 24 மணித்தியாலங்களுக்குள் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான அதிகாரத்தை இலங்கை சட்டம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எனினும், பொலிஸாரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்படும்போது அவர் கைதுசெய்யப்பட்டமை குறித்த தகவல்களை உறவினர்களுக்கு வழங்கவேண்டும் என சட்டம் கூறுகின்றபோதும், அது எப்பொழுதும் கடைப்பிடிக்கப்படுவதில்லையே என அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பசில் ராஜபக்ஷ,
“நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவ்வாறெனின், இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சவால் விடுத்திருக்க முடியும். இந்த விடயம் தொடர்பாகக் கவனிப்பதற்கு அமைச்சரவைக் குழுவொன்று உள்ளது. அரசாங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கூறப்படுகிறது” என்றார்.

மக்களின் நாடித்துடிப்பை அறியவே தேர்தல்கள்

மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொள்வதற்காகவே குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்தது எனக் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த மக்கள் ஆணை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட தேர்தல் முறைமையால் மக்களின் உண்மையான தேவையை அறிந்துகொள்ள தேர்தலொன்றை நடத்தமுடியாத நிலை காணப்படுகிறது எனவும், ஜே.வி.பி.யினரைத் தோற்கடிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார். ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படுவதற்கே கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தனர். ஆனால், திடீரென அந்தக் கட்சி எதிராகச் செயற்பட ஆரம்பித்திருப்பதால், எமது சொந்தத் திட்டங்களுடன் மக்கள் முன்னிலையில் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பணக்காரர்களுக்கே அதிகாரப் பகிர்வு தேவையாக உள்ளது

கொழும்பிலுள்ள பணக்காரர்களுக்கும், சில பத்திரிகைகளுக்குமே அதிகாரப் பகிர்வு அவசியமாக உள்ளது என அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, அடிமட்டத்திலுள்ள மக்கள் தற்பொழுது காணப்படும் அதிகாரங்களுடன் திருப்தியாக உள்ளனர் எனக் கூறினார்.

“கிழக்கிற்கு நான் சென்றிருந்தபோது கிழக்கில் அனைத்து அரசாங்க நிறுவனங்களும் சரியான முறையில் இயங்கிக்கொண்டிருந்தன. பிரதேச சபைகள் மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்கள் நன்கு செயற்படுகின்றன. முன்னர் பகிரப்பட்ட அதிகாரங்களைக் கொண்டே இவரை தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன. எனவே, இவற்றைக் கொண்டு மாகாண சபைகள் தொடர்ந்தும் இயங்கமுடியும் என நான் கருதுகின்றேன். அனைத்து மாகாண சபைகளுக்கும் இது பாரிய பிரச்சினையாக இருக்காது. ஆனால், கொழும்பிலுள்ள மக்களுக்கே இது பிரச்சினையாக உள்ளது. 13வது திருத்தச் சட்டம் மகாகாண சபைகளுக்கு மாத்திரம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கவில்லை, உள்ளூர் அரசாங்கங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கிறது” என அவர் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலுள்ள மக்களே மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என விரும்புகிறார்கள், ஆனால் அங்குள்ள மக்கள் தமக்கு தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுடன் திருப்தியாக வாழ்ந்து வருகின்றனர் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அந்த வார ஏட்டுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

No comments: