Monday 28 July 2008

ஈரானுடன் நெருக்கமான உறவை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்

ஈரானுடன் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதனால் அதற்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஈரான் அரசுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நெருக்கமான உறவுகளை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய இஸ்ரேலின் படைத்துறை உற்பத்தி நிறுவனம் (The Israeli Military Industrial Complex) சிறிலங்காவுக்கான படைத்துறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கிவரும் நாடுகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் பொருளாதார முதலீடுகள் படைத்துறை உதவிகளை அது மேற்கொண்டு வருகின்றது.

மகிந்த ராஜபக்சவினால் ஈரானுடன் கொண்டுள்ள உறவை மறைக்க முடியவில்லை. அது வெளிப்படையான ஒன்று. சிறிலங்கா அரசின் இந்த புதிய உறவு இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசிடம் உள்ள இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் தொழில்நுட்பத்தை ஈரான் அறிந்து கொள்ளலாம் என்ற அச்சம் இஸ்ரேல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசிற்கு இஸ்ரேல் நீண்டகாலமாக கனரக ஆயுதங்களை விநியோகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கொழும்புக்கான ஆயுத விநியோகத்தை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ள போதும், ஏற்கனவே வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்களை தொடர்ந்து வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: