நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்தி அதன்மூலம் பெற்றுக்கொள்ளவிருக்கும் நன்மைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கப்படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சார்க் மாநாடு முடிவடைந்த பின்னர் கூட்டறிக்கையை விடுக்காமல், இந்த சார்க் மாநாட்டால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மைகளை ஒவ்வொன்றாக ஜனாதிபதி விபரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.
மாலைதீவில் நடைபெறவிருந்த 15வது சார்க் மாநாட்டை தடுத்து நிறுத்தி, இலங்கையில் நடத்தவேண்டிய அவசியத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும எனவும், மக்கள் போதியளவு உணவின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்து சார்க் மாநாடு நடத்தப்படுவதற்கான தேவை இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் 31ஆம் திகதி 500 சார்க் பிரதிநிதிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா செலவில் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதனைவிட இந்த விருந்துபசாரத்துக்கான நடனம் உள்ளிட்ட களியாட்டக்களுக்கு 25 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் பிரதிநிதிகளுக்கு நடத்தவிருக்கும் விருந்துபசாரத்துக்கு பெருந்தொகை பணம் செலவிடப்படவிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
உயிருடன் இருப்பவர்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைத்துக்கும் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ள போதும், அவரால் வழங்கப்பட்ட எந்த உறுதிமொழிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையெனவும் கிரியல்ல தெரிவித்தார்.
அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில், அதனை இழப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் 6 மாதங்கள், ஒரு வருடத்துக்கு நீடித்தால் பலர் தொழில்களை இழக்கவேண்டிய நிலையே ஏற்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் கூறினார்.
No comments:
Post a Comment