Monday, 28 July 2008

இலங்கையின் போர் நிலவரம் குறித்து மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எண்ண அலைகள் -tamil win

இலங்கையின் அனைத்து ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்களும் இன்று யுத்தம் என்ற மாயையின் கீழ் மறைந்து போயுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

வீண்செலவுகளும் துஸ்பிரயோகங்களும் மலிந்துள்ளன.உலகிலேயே பாரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள மஹிந்தவின் அரசாங்கத்திற்குப் பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான செலவுகள் யாவும் பொதுமக்கள் மீது சுமத்தப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் இன்று 28 முதல் 30 வீதம் வரை உயர்ந்து சென்றுள்ளது. எனினும் மக்கள் குறிப்பாகச் சிங்கள மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாதபடி அரசாங்கம் மூடிமறைப்பு வேலைகளைச் செய்து வருகிறது.

இதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன. இலங்கையில் உள்ள சிங்கள ஊடகங்களில் பெரும்பாலானவை யுத்தம் என்கின்ற ஒன்றுக்காக இன்று அரசாங்கத்திற்குச் சாதகமாக எழுதும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. அல்லது அவற்றில் அவ்வாறு எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் அரசாங்கத்தின் ஊழல்களைச் சுட்டிக் காட்டுகின்ற போதும் அது பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்குச் சென்று சேராமை காரணமாக அவர்கள், அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவகை ஈர்ப்பைக் கொண்டுள்ளனர் எனலாம்.

இலங்கையில் எந்த ஒரு சிங்களவரிடம் கதைத்தாலும் அவர் “புலிகளை அரசாங்கம் தோற்கடித்து விடும்” என்ற கருத்தையே கூறுகின்றனர். அதற்கான மாற்றுக் கருத்தை அவர்கள் எண்ணியும் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற அளவில் சிங்கள ஊடகங்களும் அரசாங்கமும் இலங்கையை யுத்தகளமாக ஆக்கியுள்ளன என்றே கூறவேண்டும்.


1983 ஆம் ஆண்டுக் காலத்தைப் போலவே தற்போதும் பொது இடங்களில் அதுவும் சிங்களவர்கள் அதிகமாக உள்ள இடங்களில் தமிழில் உரையாடுவதில் அச்சநிலை தோன்றியுள்ளது. பொது இடங்களில் தமிழில் பேசினால் அதனை வித்தியாசமாக நோக்கும் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது.


அயலில் உள்ள தமிழர்களின் வீடுகளுக்கு யாராவது புதிய ஆட்கள் வந்தால் உடனடியாக படைத் தரப்பினர் வந்து சோதனையிடும் அளவிற்கு சிங்கள மக்கள் படைத்தரப்பினருடன் தமது உறவுகளை பலப்படுத்திக்கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியினர் தமது அரசியல் நலனுக்காகத் தமிழர்கள் மீது பரிவுக்காட்டுவதாகக் காட்டிக்கொள்கின்ற போதும் உள்மனதில் யுத்தவெறியுடனேயே கருத்துக்களை முன்வைப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் ஏனைய இடங்களில் இந்த நிலை என்றால் இலங்கையின் தென்பகுதியில் சொல்லவும் தேவையில்லை.


கதிர்காமம் பகுதியில் தமிழ் வர்த்தகர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளது. இந்த முறை மட்டக்களப்பில் இருந்து குறிப்பிட்ட அடியார்கள் கதிர்காமத்திற்குச் சென்ற போதும் ஏனைய தமிழ்ப் பிரதேசதங்களில் இருந்து


குறிப்பாக எப்போதும் கதிர்காமத்திற்கு அதிகமாகச் செல்லும் மலையகப் பகுதிகளில் இருந்தும் அடியார்கள் குறிப்பிடத்தக்க அளவில் செல்லவில்லை. ஏனெனில் எந்த ஒரு தமிழரையும் “புலி” எனப் பார்க்கும் தோற்றம் படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

கொழும்பில் ‘சார்க்” மாநாடு ஆரம்பமாகியுள்ளது. தமிழர்கள் இப்போதே தமது கொழும்புக்கான பயணங்களைக் காலதாமதமாக்கும் திட்டங்களை வகுத்து விட்டனர். அதற்காக கொழும்பின் முக்கிய பகுதிகளில் இருந்த தமது கடமைகளை முன்கூட்டியே அவர்கள் நிறைவுசெய்து கொண்டுள்ளனர்.


சோதனைச் சாவடிகளில் அனைத்து மக்களும் இறக்கப்பட்டுச் சோதனைகள் இடம்பெறுகின்றன. எனினும் சிங்களவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளைக் காட்டுவதைக் காண முடியவில்லை.


சிலர் அதுவும் யுத்தச் சூழ்நிலையைப் புரிந்தவர்கள் இந்த அரசாங்கத்திற்குக் கடும் எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருப்பவர்கள் மாத்திரம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

எனினும் அதுவும் ஒளிவுமறைவான கருத்துக்களாக இருக்கின்றன. மட்டக்களப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் வடக்கில் தமது விளையாட்டைக் காட்டமுடியாது எனத் தமிழ் மக்கள் நம்பினர்.


இப்போது யுத்தச் சூழ்நிலையை, களநிலவரங்களை அறியாத நிலையில் அவர்கள் குழம்பிப் போயுள்ளனர். எனினும் அவர்கள் மத்தியில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றுவார்கள்” என்ற நம்பிக்கை எப்போதும் உறுதியாக உள்ளது.

தமிழர்களைப் பொறுத்தவரையில் யாரிடமும் கதைக்கும் போது “ நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றில்லை. ஆனால் அவர்கள் ஏதோ ஒரு திட்டத்துடனேயே பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர்” என்ற கருத்தைப் பெரும்பாலும் கேட்க முடிகிறது.


ஏனெனில் சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்கள் கடந்த 25 வருட காலப் போரியல் வரலாற்றைத் தெரிந்தவர்கள் என்பது இதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் “சார்க்” மாநாட்டின் போது யுத்ததவிர்ப்பு அறிவிப்பை வெளியிட்டபோது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ராஜதந்திரத்தைப் பாராட்டுவதைக் காணமுடிந்தது.


எனினும் உள்ளுக்குள்ளே வன்னிக்குள் படையினரின் நகர்வுபற்றிச் செய்திகள் வரும்போது அவர்களின் உள்மனதில் ஒரு ஏக்கம் ஏற்படுவதை நோக்கக் கூடியதாகவே உள்ளது. இந்தநிலையில் “சார்க்” மாநாடு முடியும் வரையில் தமக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட முடிந்துள்ளது என்றும் தமிழ் மக்கள் கருத்துரைக்கின்றனர்.

இதன் பின்னர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது அவர்கள் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தவே காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே தமிழர்களைச் சிங்களவர்கள் மதிக்கிறார்கள் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அன்று தொடக்கம் ஏற்பட்டுள்ளமையாகும்.

No comments: