விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முழுமையாக வெற்றிகொள்ளும் காலம் நெருங்கிவருகின்றபோதும், விடுதலைப் புலிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் சிறியரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிப்பது இறுதித் தீர்வாக அமையாது. ஏனெனில் அந்த அமைப்பு மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தும்” என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொஹண கூறினார்.
“இது எமக்குத் தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நாளாந்தம் வான்தாக்குதல்கள் மற்றும் கடல்மார்க்கமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிவரும் நிலையிலேயே பாலித கொஹண இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர்ஸ்; செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு வருடத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளையும் இழந்துவிடுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்தமாதம் கூறியிருந்தார்.
எனினும், தற்பொழுது இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக வெடிகுண்டுகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஓடும் நடைமுறையை விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கலாம் எனவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் பாலித கொஹண எச்சரித்துள்ளார்.
“எனவே, இராணுவ மற்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளை உள்ளடக்கிய வழியின் மூலமே பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் கிழக்கில் தேர்தலில் வெற்றிபெற்று அரசியலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை கொலைகளில் செலவுசெய்யாமல் பயனுள்ள வகையில் செலவுசெய்யுமாறு வடக்கிற்கு செய்தியொன்றை நாங்கள் அனுப்பியுள்ளோம்” என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
மோதல்களால் சேதமடைந்த இலங்கையின் வடபகுதியை புனரமைப்பதில் வெளிநாடுகள் பாரிய பங்களிப்பைச் செய்துவருவதாகத் தனது செவ்வியில் குறிப்பிட்ட பாலித கொஹண, 26 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லையென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பானவை எனவும், இவற்றில் ஒரு பகுதி மாத்திரமே உண்மை எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment