Monday, 28 July 2008

15வது சார்க் உச்சிமாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, நீர்வளம், வறுமை ஒழிப்பு குறித்து கவனம் செலுத்தப்படும்- பிரசாத் காரியவசம்

15வது சார்க் மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சக்திவலுவை அதிகரித்தல், நீர்வளம், வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சார்க் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகளின் 33வது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல்களைத் தயாரிக்கும் இரண்டு நாள் சார்க் செயற்குழுக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. செயற்குழுவின் தலைவராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கிறேஸ் ஆசீர்வாதம் தெரிவுசெய்யப்பட்டார்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் சார்க் நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் குறித்து இன்றும் கலந்துரையாடப்படும் என நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும், பேச்சாளருமான பிரசாத் காரியவசம் தெரிவித்தார்.

‘எமது மக்களுக்கான பங்குதாரர்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சார்க் மாநாட்டை சிறப்பாக முன்னெடுத்துச்செல்லத் தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார். சார்க் நாடுகளுக்கிடையிலான பங்களிப்பை அதிகரிப்பதன்மூலம் மக்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

சார்க் நாடுகளுக்கிடையிலான கூட்டுறவின்மூலம் நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும் எனத் தெரிவித்த பிரசாத் காரியவசம், 15வது சார்க் மாநாட்டில் சார்க் அபிவிருத்தி நிதியம், குற்றவியல் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனக் கூறினார்.

15வது சார்க் மாநாடு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. நேற்று 27ஆம் திகதி ஆரம்பமான சார்க் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளின் மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. நாளைமுதல் 30ஆம் திகதி வரை சார்க் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்கள் கலந்துகொள்ளும் மாநாடும், 31ஆம் திகதி முதல் 1ஆம் திகதி வரை சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடும், ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை சார்க் நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாடும் நடைபெறவுள்ளது.

No comments: