Monday 28 July 2008

வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு

ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம்.

இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம்.

வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும்.

1940 இல் அவருடைய ஊரான கியூஜிபிக்குள் நுழைந்த அந்நியர்கள் கிராமத்தலைவரிடம், ஊரிலுள்ள சகல இளைஞர்களின் பெயர்களையும் பெற்றுக்கொண்டு அனைவரையும் தம் வாகனங்களில் ஏற்றினர் என்பதைவிட இட்டு நிரப்பினர் என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும்.

ஒத்துழைக்க மறுத்தவர்கள் ~சட்டத்திற்கு| முன்பு நிறுத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வெறுமனே வாசிக்கும் உங்களுக்கே அவர்கள் எங்கு, எதற்காகக் கொண்டு செல்லப்பட்டார்கள் என்று அறிய ஆவலாயிருக்கும்.

ஆனால், யோறோ பாவிற்கு மட்டுமன்றி 2 ஆம் உலக யுத்தத்தில் மேற்கு-ஐரோப்பிய நாடுகளுக்காகப் போரிடுவதற்காகப் பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்ட 2000000 (2 மில்லியன் 20 இலட்சம்) ஆபிரிக்க வீரர்களுக்கும்கூட ஆரம்பத்திலே அதை அறிந்துகொள்ள முடியாத நிலைமைதான்!

மீண்டும் யோறோ பாவிடம் வருவோம். செனேகலின் தலைநகர் டாக்கர் இலிருந்து புறப்படுவதற்கு முன்பு கறுப்பின வீரர்கள் அனைவருக்கும் ஊசி மருந்து ஏற்றப்பட்டது. அதற்குப் பின்னர் 24 மணித்தியாலத்திற்கு தாகம், பசி உட்பட எந்தவோர் உணர்வும் அவர்களுக்கு இருக்கவில்லை.

இறுதியில் கப்பல் மூலமாக பிரான்சின் தென்கிழக்குத் துறைமுக நகராகிய மார்செய்ல் இற்கு அருகாகவுள்ள ருலூன் இல் அவர்கள் தரையிறக்கப்பட்டனர். அங்கு பிரான்சை ஆக்கிரமித்திருந்த யேர்மனியப்படைகளின் 9 டிவிசன்களுக்கு எதிராக ஆபிரிக்க வீரர்கள் போரிடவேண்டியிருந்தது.

அதேவேளை, இந்த ஆபிரிக்க வீரர்களின் தாயக தேசங்களை பிரான்ஸ்தான் நீண்ட காலமாகவே ஆக்கிரமித்திருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எப்படி உயிர்தப்ப முடிந்தது என்று தெரியாமலேயே, தனது குடும்பத்துடன் எத்தொடர்பையும் கொண்டிருப்பதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், 4 வருடங்கள் கழிந்தபின் போரின் முடிவில் யோறோ பா வீடுசெல்ல அனுமதிக்கப்பட்டார்.

யேர்மனிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தோற்கடித்து பிரான்சின் சுதந்திரத்தை உறுதிசெய்த செனேகல் வீரர்கள் 1960 வரைக்கும் பிரான்சின் பிடிக்குள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதை என்னவென்பது!

இதைப்போலவே தம்மை ஆக்கிரமித்திருந்த பிரித்தானியாவிற்கு ஆதரவாக அதனால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வீரர்கள் இலட்சக்கணக்கானோர் கண்தெரியாத் தொலைவுகளில் உயிர்கொடுத்த வரலாறுகள், அறியப்படுவதற்கு ஆர்வமில்லாமல் இன்னும் ஆங்காங்கே மறைந்து கிடக்கின்றன.

அடுத்ததாக எதியோப்பியாவைச் சேர்ந்தலைக் ரிகுகான் அஸ்ரற்கெவாய்.. இல்லை இல்லை.. மனம் திறக்கிறார். 'எங்களைப் பொறுத்தவரைக்கும் இத்தாலி எங்கள் நாட்டை 1935 இல் ஆக்கிரமித்தபோதே 2 ஆம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது.

1935 ஒக்ரோபர் 3 அன்று 300,000 பேரைக்கொண்ட மாபெரும் இத்தாலியப்படை எங்களின் எல்லைகளைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. அதில் அரைவாசித்தொகையினர் இத்தாலி ஆக்கிரமித்து வைத்திருந்த லிபியா, சோமாலிலாந்து, எரித்திரியா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய நவீன போர்த்தளவாடங்களுக்கு முன்னே, வாள்களுடனும் ஒரு சில வேட்டைத் துப்பாக்கிகளுடனும் நாங்கள் வெறும் 50,000 பேர் மட்டுமே இருந்தோம்.

எனினும் எங்கள் நாட்டின் பௌதீகச் சூழலை நன்கு அறிந்தவர்களாக நாம் இருந்தோம். நான் போராளிகளுடன் இணைந்தபோது எனக்கு வயது 8 மட்டுமே. அப்போது நான் தகவல் காவிச்செல்பவனாக அவர்களுக்கு உதவினேன். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் தமக்கேற்ற விதத்திலே எதிரிப்படைகளை எதிர்த்தார்கள்.

குறிப்பாக, தாம் ஏற்கெனவே தயாராக வைத்திருக்கும் தேன்கூடுகளை எதிரிப்படைகள் மீது வீசியெறிவார்கள். இதனால் கலையும் தேனீக்கள் அவர்களை நிலைகுலையச்செய்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறான ஆக்கிரமிப்புக்கெதிரான எங்களின் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஐந்து இலட்சம் வரையானோர் காலப்போக்கில் இணைந்திருந்தனர்.

தாயக தேசத்திலிருந்து எதிரிகளை விரட்டும் வரை சவரம் செய்துகொள்ளப்போவதில்லை என்றும் பலர் சூளுரைத்தனர்" வேறெந்த அந்நிய ஆதரவுமின்றி எளிமையான வழிமுறைகளினூடாக இவ்வாறு ஐந்து வருடங்களாகத் தொடர்;ந்த அவர்களின் எதிர்ப்பிற்கு ஆதரவானதொரு புறச்சூழல் அப்போது ஏற்பட்டது.

வரலாற்றின் நேரடிச்சாட்சியமான மற்றொரு வீரரான அசெபா பாயு கூறுகிறார்; 'இத்தாலியச் சர்வாதிகாரியான முசோலினி தங்களின் பரமவைரியான ஹிட்லருடன் கூட்டுச்சேர்ந்ததை அடுத்தே பிரித்தானியா இத்தாலிக்கெதிராக தன் படைகளை நிலைநிறுத்தத் தொடங்கியது".

எனினும் கறுப்பின வீரர்கள் எதிர்கொண்டுவந்த அவலத்தில் இது எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. மொமாடோ ஜலோ ஆபிரிக்காவின் காம்பியா தேசத்தைச் சேர்ந்தவர். கிழக்கு-பர்மாவிலே யப்பானியப் படைகளுக்கு எதிராக பிரித்தானியா சார்பில் போரிடுவதற்காக அங்கு அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆபிரிக்க வீரர்களில் ஜலோவும் ஒருவர்.

தங்களில் அநேகமானோருக்கு எதிரிகளுடன் போரிடுவதற்காக அரிவாள்களே தரப்பட்டிருந்ததை அவர் நினைவு கூருகிறார். எனினும் உயிர் என்று வந்துவிட்டால் எப்படியாவது போராடி அதைக் காப்பாற்றித் தானே ஆகவேண்டும் எனச் சிரித்துக்கொண்டு கூறும் அவர், அந்த அரிவாள்களைக் கொண்டு யப்பானிய வீரர்களின் கைகளை வெட்டியதை நேற்று நடந்ததைப் போல அப்படியே ஒன்றும்விடாமல் இப்போதும் ஒப்புவிக்கிறார்.

இவ்வளவிற்கும் வெள்ளையின வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியம், உணவு, உடைகள், படுக்கை என்று எல்லாவற்றிலுமே கறுப்பு வீரர்கள் மோசமாகப் பாரபட்சம் காட்டப்பட்டார்கள். சீருடைகளிலே பொக்கெற், கொலர், ஹிப் போன்றவைகூட கறுப்பினத்தவர்களுக்குத் தேவையில்லை எனக்கருதிய பிரித்தானியா அவற்றில்கூட மிச்சம் பிடிக்க முனைந்தது.

வெள்ளையின போர் வீரர்களுக்கு உணவாக அரிசிச்சோறு (இந்தியாவிலிருந்து திரட்டப்பட்டது), மரக்கறிகள், குடிபானங்கள் என்றெல்லாம் வழங்கப்பட, கறுப்பின வீரர்களோ மரவெள்ளி- மற்றும் சோளக்களியினால் முழுநாளும் வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.

சுருக்கமாகச் சொல்வதானால் செத்துவிடாமல் முன்னணியை நிரப்புவதற்கு மட்டும் எதுவெல்லாம் அத்தியாவசியமோ, அவை மட்டுமே ஆபிரிக்க வீரர்களுக்கு அளிக்கப்பட்டன. இதுவரையும் 2 விதங்களை நாம் கண்டிருந்தோம். ஒன்று தன்னை அடிமைப்படுத்தியவனின் விடுதலைக்காகப் போரிடுதல், மற்றையது ஒப்பிடமுடியாத இத்தாலியின் பாரிய நவீன படைகளை எளிமையான ஆனாலும் வீரமான போரின் மூலம் எதிர்த்தல். பின்னையதில் மடியும் போதுகூட ஒரு மகிழ்விருக்கும்.

ஆனால், முன்னையதிலோ அர்த்தமும் அடையாளமும் இல்லாமல் மரணத்தின் பின்னும்கூட வலிக்கும். இவை இரண்டுக்கும் அப்பால் இன்று முன்னணியில் உலக வரலாற்றை எழுதிவரும் நாடுகள் தத்தம் தேசங்களை மீட்பதற்காக என்னவெல்லாம் செய்துள்ளன என்பதையும் ஓரளவு கண்டிருந்தோம்.

வால் பிடிக்கும் அடிமைகளுக்கு வரலாறு இல்லை என்பதையும், இத்தாலியை எதிர்த்து வாளெடுத்துப் போர் புரிந்த வீரர்களால் தங்களின் தேசத்திற்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கிறது என்பதையும்கூடக் கண்டோம்.

வரலாறானது வலிமையினாலேயே எழுதப்படுகிறது. சுதந்திரம் எல்லாவற்றுக்கும் மேலாக முதலாம் பட்சமானது! அடிமைகளாகி அடுத்தவர்களுக்காக மடிய வேண்டியோ அல்லது வெறும் வாளோடு போராடவேண்டிய வளங்குன்றிய நிலையோ எமக்கில்லை.

எல்லைகளை நெருக்கிவரும் எதிரிகளை எதிர்ப்பதே இன்றுள்ள முதன்மையான விடயம். அழகிய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான ஆவலுடன் ஒவ்வொரு தமிழனும் தேசியத் தலைவரின் எண்ணக்கனவுகளை நிறைத்துக்கொண்டு எழுந்துவிட்டால், வரலாற்றை நாமும் எழுதலாம். ஏனென்றால் வால்பிடிக்கும் அடிமைக்கு அல்ல, வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு!

(ஆதாரம்: பிர்கிற் மோர்கென்றத் மற்றும் கார்ள் றொசெல் ஆகியோரின் ரவைகள் மட்டுமே வெள்ளை, கறுப்பு பார்ப்பதில்லை - 2 ஆம் உலக யுத்தத்தில் ஆபிரிக்கா என்ற விவரணம்)

நன்றி: ஈழநாதம் (18.07.08)

No comments: