நாட்டில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளினது எண்ணிக்கை கடந்த ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றச்செயல்களினதும், குற்றவாளிகளினதும் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கள்ள நோட்டு அச்சிட்டமை, முத்திரைகள் அச்சிட்டமை, கொலை, கொலை முயற்சி, தாக்குதல்களை நடாத்தியமை, வீடுடைப்பு, களவு, கொள்ளை, ஆள்மாறாட்டம், ஏமாற்று, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு, இவர்களது கைவிரல் அடையாளத்தைக் கொண்டே பொலிஸ் பதிவுகள் மூலம் அவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு குற்றவாளி தொடர்பாகவும் தனித்தனியான கோவைகள் பேணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரவு, அதில் அவர்களது புகைப்படம், பெயர், குற்றச்செயல், அவரது கைவிரல் அடையாளத்துடன் தொடர்புபடக் கூடிய ஏனைய தகவல்கள் என்பனவும் இக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கோவைகள் அனைத்தும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு அறையில் கடுமையான பாதுகாப்பின் கீழ் பேணப்படுவதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 301,090 குற்றவாளிகள்
இந்தப் பிரிவின் தகவல்களின்படி, 301,090 குற்றவாளிகள் நாட்டில் இருப்பதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 285,695 பேர் ஆண் குற்றவாளிகள் எனவும், 15,395 பேர் பெண் குற்றவாளிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே இலங்கையில் குற்றவாளிகளின் எண்ணிக்கை 300,000 ஐத் தாண்டியிருக்கும் முதல் சந்தர்ப்பம் எனவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 293,098 ஆக காணப்பட்டதாகவும், இவர்களில் 278,326 பேர் ஆண்கள் எனவும், 14,772 பேர் பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பதிவாகியுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை முதல் 7 மாதத்தினுள் 7,992 இனால் அதிகரித்துள்ளதாகவும் மேற்படி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த பாரிய அதிகரிப்பானது நாட்டிற்கு ஓர் அபாய எச்சரிக்கை எனவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில், பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை கைவிரல் அடையாளமற்ற குற்றச்செயல்கள் என்பன மேற்படி தரவுகளில் உள்ளடக்கப்பட வில்லை எனவும் இந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 38,966
இதற்கிடையில், பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, இலங்கையில் 38,966 மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 38,383 ஆண்களும் 583 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1000 பேரில் இருவர் என்ற வீதத்தில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் காணப்படுவதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்தக் கோவையிலிருந்து மரணம், நன்னடத்தை, அல்லது 80 வயதைத் தாண்டியமை ஆகிய காரணங்களால் வருடாந்தம் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் அகற்றப்படுவதாகவும் பொலிஸ் தலைமையக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment