Tuesday 29 July 2008

மன்மோகன் சிங் பிள்ளையானை சந்திக்க முன்னுரிமை அளிப்பதா--ஜே.வி.பி.சீற்றம்

உள்நாட்டு அரசியலில் இந்தியா அளவுக்கதிகமாக தலையீடு; ஜே.வி.பி.சீற்றம்
எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளாதாரத்தைச் சுரண்டுவதிலும் இந்தியா நேரடியாகத் தலையிடத் தொடங்கி இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. இந்தியாவின் ஆதிக்கம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளது.

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எமது நாட்டை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் விடயத்தில் ஜே.ஆர்.ஜயவர்தனவை விடவும் மோசமானதாகக் காணப்படுவதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடக வியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

""சார்க் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை ஜே.வி.பி. ஒருபோதும் எதிர்க்கவில்லை. பிராந்திய நாடுகளுக்கிடையில் நட்புறவும் ஒத்துழைப்பும் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதில் முரண்படப்போவதுமில்லை. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், இன்னொரு நாடு இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. சார்க் அமைப்பின் வெளிநாட்டுக் கொள்கையின்படி அனைத்துச் செயற்பாடுகளும் 50க்கு 50 என்ற வீதத்தில் பாதுகாக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம்,

கலாசார உறவுகள் அனைத்து நாடுகளும் சமமாகப் பேணப்பட வேண்டும்.

ஆனால், இந்தியா அதன் ஆதிக்கத்தன்மையை சக நாடுகள் மீது பிரயோகிக்க முற்படுகின்றது. பிரதானமாக இலங்கையில் இந்தியா சட்டாம்பிள்ளை வேலை பார்ப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றது. ஆரம்பம் முதலே இந்தியா தவறான பாதையிலேயே பயணிக்கின்றது. அண்மைக்காலமாக இந்தியாவின் ஆதிக்கப் போக்கு அதிகரித்து வருகின்றது.

அமரர் பண்டாரநாயக்கா சிங்கள மாகாண சபையை ஆரம்பித்த போது சொன்ன வார்த்தைகள் இன்று நிதர்சனமாகி வருகின்றது. நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் சிக்கியதைவிட இந்தியாவின் ஆதிக்கத்துக்குள் மிக மோசமாக சிக்கிவிடலாம் என்று அவர் அன்று எச்சரித்திருந்தார். அந்த வார்த்தைகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் யாருக்காக நடத்தப்பட்டது. இந்தியா கட்டாயப்படுத்தியதற்காக மகிந்த ராஜபக்ஷ இத்தேர்தலை நடத்தினார். சார்க் மாநாட்டில் பங்கேற்க இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் தாளத்துக்கு இலங்கை அரசு ஆடுவதை புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.

திருகோணமலையில் 625 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை பொருளாதார வலயமாக மாற்றி தன்வசப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு அரசு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இலங்கையில் எண்ணெய் வள ஆய்விலும் இந்தியா கூடுதல் அக்கறை காட்டுவது அங்கும் ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே ஆகும். எண்ணெய் வள ஆய்வு உடன்படிக்கை அதற்கு ஏதுவான வகையிலேயே செய்துகொள்ளப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கம்பனிக்கே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து கேபிள் மூலம் மின்சாரம் பெறும் திட்டம் கூட இலங்கைக்கு பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். இந்தியா நினைத்தால் ஒரு இரவுக்குள் முழு நாட்டையும் இருளில் மூழ்கடிக்க முடியும். அப்படி நடக்குமானால் அதன் பின்விளைவுகள் எவ்வாறாக அமையும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.

இந்தியாவின் இந்த ஆதிக்கப்போக்கு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய ஆபத்தையே காட்டுகிறது. எமது தேசிய பொருளாதாரத்தையும் வளங்களையும் சூறையாடும் திட்டத்துடன் இந்தியா வியூகம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் அதற்கான வழிகளை இந்தியாவுக்கு தாராளமாக திறந்துவிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசும் தமது அரசியல் நலன்களுக்காக நாட்டை இந்தியாவுக்கு தாரைவார்க்கத் தயாராகிவிட்டனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட வேண்டும். நாம் பொறுப்பின்றிச் செயற்பட்டால் எமது நாடு மீண்டுமொரு தடவை அடிமை நாடாக மாறிவிடலாம். இந்தியாவின் இந்த ஆதிக்க முயற்சியானது பயங்கரவாதத்தை விடவும் அபாயகரமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்

No comments: