இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக, அக்குழுவில் அங்கம்வகித்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்ய குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், தூதுக்குழுவினரின் திருகோணமலை விஜயம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான பொறுப்பை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகமே ஏற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அவர் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும், நிரஞ்சன் தேவ ஆதித்யவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், அது தேவ ஆதித்யவின் தனிப்பட்ட கருத்து எனவும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தூதுக்குழுவினரின் கருத்து அல்லவெனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்துக்களும், ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களும் நிரஞ்சன் தேவ ஆதித்ய உள்ளிட்ட தூதுக்குழு அங்கத்தவர்கள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களே என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் பிலிப் கமாரிஸ் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட நிரஞ்சன் தேவ ஆதித்ய, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு, மாறாக அவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி விபரித்தமை நகைப்புக்கிடமானது எனவும் கூறினார்.
அத்துடன், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றித்தினால் 12 நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளுமா அல்லது இழந்துவிடுமா என்பது குறித்து தாம் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment