Monday 28 July 2008

வன்னியில் நூற்றுக் கணக்கானோர் மரங்களின் கீழ் தஞ்சம்; விரைவில் கூடாரங்கள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர் ரிஷாத்

வடக்கில் தொடரும் மோதல்களின் காரணமாக இடம்பெயர்வோர், தற்காலிக கூடாரங்களின்றி மரங்களின் கீழ் தங்கியிருப்பதாக மனிதாபிமான நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோருக்கான கூடாரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

"கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூடாரங்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுக்களை மேற்கொண்டு அவர்கள் மூலமாக கூடாரங்கள் வழங்கப்படும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கின் இடம்பெயர்வுகள் தொடர்பில், மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான முகவர்களுக்கிடையிலான நிலையியற் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் பகுதியில் மாத்திரம் புதிதாக 817 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கான தற்காலிக கூடாரங்களை அமைக்க யுனிசெப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனங்கள் கூரைத் தகடுகளை வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன: பரீட்சைகள் ஒத்திவைப்பு

இதேவேளை, மோதல்கள் காரணமாக வன்னிப்பிரதேசத்தில் 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மடு வலயத்தில் 35 பாடசாலைகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 20 பாடசாலைகளுமாக வன்னியில் மொத்தமாக 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான பாடசாலைகளில் இடம்பெயர்ந்தோர் தற்காலிகமாகத் தங்கவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் ஜூலை 21 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெயர்வுகள் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான முகவர்களுக்கிடையிலான நிலையியற் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெறும் மோதல்கள் காரணமாகவும், தொடரும் ஷெல் தாக்குதல்கள் காரணமாகவும் அங்கு பதற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன்காரணமாக, வடக்கு மற்றும் தெற்கு முன்னணி பாதுகாப்பு நிலைகளில் பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது" என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோதல்கள் மேலும் தொடருமானால் மாந்தை மேற்கு மற்றும் முழங்காவில் பகுதிகளிலிருந்து சுமார் 5,500 குடும்பங்கள் இடம்பெயரும் என எதிர்பார்ப்பதாகவும் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான முகவர்களுக்கிடையிலான நிலையியற் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரிவில் 5,026 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், பூநகரி பிரிவிலுள்ள இரு கிராமங்களில் 959 குடும்பங்கள் கடந்த இரு வாரங்களில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் இடமாற்றம்

இதேவேளை, மோதல்கள் காரணமாக மல்லாவி, வேளான்குளம், நெடுங்கண்டல் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் கடந்த வாரம் முதல் அக்கராயன் அரசாங்க வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்காக 3,500 லீற்றர் டீசலினை வழங்கி உதவுமாறு வன்னி விசேட படையணியின் கட்டளைத் தளபதிக்கு கிளிநொச்சி அரசாங்க அதிபர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்: சம்பந்தன்

இதற்கிடையில், வன்னியில் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கஷ்டப்படும் அகதிகள் தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும், அகதிகளாகியுள்ள மக்களின் நிலை குறித்து தாம் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments: