அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக பிரான்ஸ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளார். தனது கண்காணிப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையொன்றை அவர் பிரான்ஸ் அரசாங்கத்திடம் அடுத்தமாதம் கையளிக்கவுள்ளார்.
குறித்த பிரான்ஸ் நீதிபதி, பிரான்ஸ் அரசாங்கத்தாலேயே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருக்கும் அவர், அனைத்து விசாரணைகளையும் நடத்திவிட்டு அடுத்த மாத இறுதிப் பகுதியில் பிரான்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நாடு திரும்பியதும் பிரான்ஸ் அரசாங்கத்துடனும், சர்வதேச கூட்டணிகளுடன் கூடி ஆராய்ந்து கொடூரமான படுகொலை குறித்த சர்வதேச விசாரணைகளை நடத்துவது பற்றித் தீர்மானிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்ஷன் பேம் பணியாளர்கள் 17 பேரினதும் படுகொலைகள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அக்ஷன் பேம் நிறுவனத்தின் ஊடக அதிகாரி லுசிலே கிரொஸ்ஜேன் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையில் இலங்கை அரசாங்கம் முக்கியமானதாக இருந்தாலும் துரித விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிரான்ஸ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தற்பொழுது இலங்கையில் விசாரணைகளை நடத்திவருகிறார். அவர் நாடு திரும்பியதும் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கமும், அக்ஷன் பேம் நிறுவனமும் காத்திருக்கிறது” என கிரொஸ்ஜேன் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நீதிபதி ஒருவர் இலங்கை வந்திருப்பதை கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூதூரில் அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்குக் குறித்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து நம்பிக்கை இல்லையெனத் தெரிவித்து அக்ஷன் பேம் நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தது. இந்தப் படுகொலைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அந்த அமைப்பு கூறியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை பிரான்ஸ் பொறுப்பேற்ற பின்னர் பிரான்சிற்கும், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரே விசாரணைகளை மேற்கொள்வதற்கு பிரான்ஸ் நீதிபதி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment