Tuesday, 29 July 2008

குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படும்- முன்னாள் நீதிபதி நிசங்க உடலகம

முக்கியமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி நிசங்க உடலகம கூறியுள்ளார்.

“எந்தவித இடையூறுகளும் இன்றி ஆணைக்குழு தொடர்ச்சியாகக் கூடியிருந்தால் விசாரணைகளைத் துரிதமாக முடித்திருக்க முடியும். எனினும், ஆணைக்குழு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்பட்டு வருவதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக விசாரணைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. தற்பொழுது சார்க் மாநாட்டுக்காக அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சரியான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், இந்தப் பரிந்துரைகள் முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் உட்பட ஏனைய குற்றச்செயல்களின் குற்றவாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் எனவும் முன்னாள் நீதிபதி கூறினார்.

“ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி நேசையா மற்றும் ஜாவிட் யூசுப் ஆகியோர் விலகியதைத் தொடர்ந்து ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. எனினும், இதனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம மேலும் தெரிவித்தார்.

No comments: