வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சுமார் 1,200 தமிழ்க் கைதிகளின் நலன்களைப் பேண உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், அவர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே பிரதம நீதியரசர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான சாட்சியங்களும் அடிப்படைகளும் உள்ளவர்களைத் தவிர ஏனையோரை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதம நீதியரசர் இங்கு உத்தரிவிட்டுள்ளார்.
இதேவேளை, இவ் வழக்கில் அரசாங்க தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதவான் நீதிமன்ற நீதிபதி விரைவில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமளவான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் மட்டக்குளி பகுதியில் தமிழர்கள் அதிகாலையில் அழைத்துச்செல்லப்பட்டு வீடியோ பதிவுசெய்யப்பட்டமை குறித்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல அப்பாவிகள் தென்பகுதி சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment