Thursday, 31 July 2008

அரியாலை கிழக்கு செம்மணிப் பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு- பொலிஸ் பேச்சாளர்

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு, செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரியாலை கிழக்கு, செம்மணிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த டனிஷ் அமைப்பினர் குறிப்பிட்ட இடத்திலிருந்து மனித எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து சாவிக் கோர்வைகள் மற்றும் உக்கிய நிலையிலான ஆடைகள் மீட்கப்பட்டதாக அவர் இன்று வியாழக்கிழமை கூறினார்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு யாழ் மாவட்ட நீதவான் வசந்தசேனன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இன்று பிற்பகல் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

பெண் ஒருவரின் எலும்புக்கூடுகளே மீட்கப்பட்டதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மீட்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஏ-9 வீதியிலிருந்து மிகவும் அருகாமையிலேயே இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்பொழுது எலும்புக்கூடு மீட்கப்பட்ட பகுதியிலிருந்து 400 மீற்றர் தொலைவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோரஸ்ட் நிறுவனமும் மனித எச்சங்களை அண்மையில் கண்டெடுத்திருந்தாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

1996ஆம் 97ஆம் ஆண்டு காலப் பகுதியில் செம்மணிப் பகுதியிலிருந்து பல எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: