Tuesday 29 July 2008

இலங்கை அமைச்சர் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை --அதிர்சியில் அமைச்சர்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாதச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர் சதாசிவம் கடந்த 2000ஆம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறியபோது, அவர் நுவரெலியாவிலுள்ள கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்தக் கூடாது என கட்சி தீர்மானித்தது. இத் தீர்மானத்தை எதிர்த்து சதாசிவம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்; மனுத் தாக்கல் செய்தார். இதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இடைக்கால உத்தரவொன்றைப் பெற்றது” என அக்கட்சியின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

“அந்த உத்தரவுக்கமைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியாவிலுள்ள அலுவலகத்தைப் பயன்படுத்தியது. எனினும், நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததாகக்கூறி நுவரெலியா நீதிமன்றம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது” என யோகராஜன் கூறினார்.

எனினும், இந்தத் தீர்ப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவிருப்பதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

No comments: