Tuesday, 29 July 2008

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கவுள்ளார்???

இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராக நியமனம் பெற்றுள்ள திருமதி.நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்போது இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகருடனும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் பற்றிய தேசிய செயற்திட்ட அறிக்கை குறித்து திருமதி நவநீதம்பிள்ளையிடம் தான் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

"நாட்டின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் அவரிடம் எந்தவொரு நேரத்திலும் விளக்கமளிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஏற்கனவே நான் தெரிவித்த மனித உரிமை நிலைவரம் தொடர்பான தேசிய செயற்திட்ட அறிக்கைக்கு பல நாடுகள் சிறந்த வரவேற்பை அளித்துள்ளன " என்றும் அமைச்சர் சமரசிங்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

திருமதி நவநீதம்பிள்ளையின் இனத்துவப் பின்னணி குறித்து அந்த ஊடகம் கேட்டதற்கு, இன ரீதியாக அவர் தமிழராகவிருக்கின்ற போதிலும் அது இலங்கை அரசாங்கத்தினதோ அல்லது நாட்டினதோ விவகாரங்களில் எந்தவித பாதிப்பையும் எற்படுத்தாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழரும் நீதிபதியுமான திருமதி நவநீதம்பிள்ளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக அண்மையில் நியமனம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: