விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை இராணுவத்தினர் ஐந்து முனைகளினூடாக முன்னேறி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்றின் செய்தியாளர் ருவான் வீரக்கோன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொட்டொம் லைன் வார இதழில், களமுனையிலிருந்து அறிக்கையிடப்படுவதாகக் கூறி வெளியிடப்பட்டுள்ள விசேட களநிலைவர அறிக்கையிலேயே இந்த விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
4ஆவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில் இராணுவத்தினர் ஐந்து முனைகளில் முன்னேறி வருவதாகவும், இதற்கு முன்னர் இத்தகையதொரு நடவடிக்கைக்குப் புலிகள் முகம் கொடுத்ததில்லை எனவும் ருவான் வீரக்கோன் என்ற அந்தச் செய்தியாளர் தனது களமுனை ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயசிக்குறு படை நடவடிக்கையைத் தவிர, முதலாம், 2ஆம், 3ஆம் ஈழப்போர்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படை நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஒரு முனையினூடாகவே முன்னேறியதாகக் குறிப்பிடும் அவர், இதனால், புலிகளும் ஒரே முனையில் தமது பலத்தைத் திரட்டி இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருந்ததாகவும் தனது அறிக்கையில் ருவான் குறிப்பிடுகிறார்.
வன்னிவிளாங்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினரின் 57ஆவது படைப்பிரிவைச் சேரந்த 571, 572 மற்றும் 573ஆவது விசேட பிரிகேட் அணிகள், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்களை நோக்கி தந்திரோபாய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தனது அறிக்கையில் விபரிக்கிறார்.
இதுதவிர, ஏ-9 வீதியின் கிழக்குப் பக்கமிருந்து இரண்டாவது அதிரடிப்படைப் பிரிவும், மன்னாரின் வடபகுதியிலிருந்து 58வது படைப்பிரிவும், வெலி ஓயாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி 59ஆவது படைப்பிரிவும் முன்னேறி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகல் வேளையில் மட்டுமல்லாமல் இரவு வேளைகளிலும் கூட படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களமுனையில் நிற்கும் படையினர் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிடும் அந்தச் செய்தியாளர், படையினர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் மறைந்திருந்து தாக்கும் உத்திகளைக் கடைப்பிடித்து வருவதாகவும் விபரித்துள்ளார்.
“இராணுவத்தினர் இப்போது முன்னணி பாதுகாப்பு நிலைகளைக் (Forward Defensive Lines)கொண்டிருப்பதில்லை. பதிலாக, முன்னணி தாக்குதல் நிலைகளையே கொண்டிருக்கின்றனர்;(Forward Offensive Lines)” என்று களமுனையிலிருக்கும் மூத்த அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
தற்போதைய படை நடவடிக்கையில் மாங்குளம் பிரதான மையமாக விளங்குவதாகக் குறிப்பிடும் ருவான், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு பிரதான நகரங்களுக்குமான பாதைகளின் மையமாக மாங்குளம் விளங்குவதால் அதைக் காப்பாற்றுவதற்கு புலிகள் கடும் பிரயத்தனம் எடுப்பார்கள் என்றும் விபரித்துள்ளார்.
மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டால் அதன் பின்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு சுமார் 20 - 25 கிலோ மீற்றர்களே இருப்பதாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment