Monday 28 July 2008

இந்தியாவின் கிழக்கு மாகாண முதலீடுகளைக் கருணா வரவேற்கிறார்

கிழக்கு மாகாணத்தின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாகயமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காலடி பதிப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும், இலங்கையின் வளங்களை முற்றாகத் தம்வசப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி. மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன குற்றஞ்சாட்டிவரும் நிலையிலேயே கருணா அம்மான் இந்தியாவின் முதலீட்டை வரவேற்றுள்ளார். இந்தியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ முதலீடுகள் கிடைக்கப்பெற்றால் அது மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் குதம், அனல்மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா உதவிவழங்கியுள்ளது.

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். 200 பேர் இந்த மாத இறுதியில் மக்கள் பாதுகாப்புப் படையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத்துக்குக் கூறியுள்ளார்.

“பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கான தகுதிகளை எவராவது பூர்த்திசெய்தால் அவர்கள் பின்னர் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்” என்றும் கருணா தெரிவித்தார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிரக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் யோசனைத் திட்டத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றை தமது கட்சி தயாரித்து வருவதாகவும், இந்த யோசனைத் திட்டம் விரைவில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அத்துடன், கல்வி, காணி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான அதிகாரங்களையும் கோரவிருப்பதாக கருணா குறிப்பிட்டார்.

“கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் பல்வேறு அமைச்சர்களைச் சந்திப்பதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். அண்மையில் நான் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை சந்தித்திருந்தேன்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அந்த ஊடகத்திடம் கூறியிருந்தார்.

விவசாயக் காணிகள் தொடர்பாக முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 480 பேருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமனங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் 125 தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கல்வி அமைச்சரிடம் மனுக்கொடுக்க முற்பட்டபோது, தொண்டர் ஆசிரியர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.

எனினும், கல்வியமைச்சரைச் சந்தித்து தமது மனுவைக் கையளித்ததாக தொண்டர் ஆசிரியர் ஒருவர் பி.பி.சி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருந்தார். உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் தமக்கு உறுதிமொழி வழங்கியதாக அந்த ஆசிரியர் பி.பி.சி.யிடம் கூறியிருந்தார்.

No comments: