யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத்தின் 18வது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 130 தமிழாலயங்களில் 6500 க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ், சுற்றாடல் , சமயநெறி போன்ற பாடங்களுடன் தமிழ்க்கலைகளையும் வாரவிடுமுறை நாட்களில் பயின்று வருகின்றார்கள்.
அவர்கள் ஆண்டுமுழுவதும் தமது தமிழாலயங்களில் பயின்ற வித்தைகளை 12.4.2008 சனிக்கிழை யேர்மனியில் 5 முக்கிய நகரங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட 5 அரங்குகளில் விழாவெடுத்து மகிழ்ந்தார்கள்.
18 ஆண்டுகளுக்கு முன்னர் 12 மாணவர்களுடன் Juechenநகரில் ஆரம்பித்த தமிழ்ப்பணி இன்று யேர்மனி முழுவதிலும் 130 தமிழாலயங்களாகப்பரிணாமம் பெற்று பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. யேர்மனியின் வடக்கே பிறீமன் நகரிலும் மத்தியில் கம் மற்றும் யூச்சன் நகரங்களிலும் தெற்கே புற்றில்போர்ன், முன்சன் ஆகிய 5 ஆரங்குகளிலும் 5, 10, 15 ஆண்டுகள் ஆசிரியர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயலாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், தமிழ்மொழி, சுற்றாடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான தேர்விலும் தமிழ்த்திறன் போட்டிகளிலும் நாடுதழுவிய ரீதியாக முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களும் தமிழாலயங்களும் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டன.
இவ்வாண்டுவிழாவில் வழமைக்கு மாறாகப் பெரும் திரளான யேர்மனியர்கள் கலந்துகொண்டதுடன் 3 அரங்குகளில் அந்த நகரங்களின் நகரபிதாக்களும் 2 அரங்குகளில் அந்த நகரங்களின் முக்கிய அரசியற் பிரமுகர்களும் பிரதமவிருந்தினர்ளாகக் கலந்துசிறப்பித்து உரையாற்றினார்கள்.
தமது உரையில் தமிழ்க் கல்விக் கழகத்தின் சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பையும் பெற்றோரின் பொறுப்புக்களையும் மாணவர்களின் ஆர்வத்தையும் வியந்து பாராட்டியதுடன் தமிழர்கள் தமது அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் செய்யும் பெருமுயற்சிகள் யேர்மனியில் வாழும் ஏனைய தேசிய இனங்களைவிடத் தனித்துவமானதெனவும் பாராட்டினார்கள்.
தமிழாலயங்களின் செயற்பாடுகளுக்குத் தமது நகரங்களில் தம்மாலான ஒத்துழைப்புக்களை எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கூறிமகிழ்ந்தார்கள். தமிழாலயங்களில் பயிலும் 6500 க்கு மேற்பட்ட மாணவர்களில் 67 வீதமான மாணவர்கள் யேர்மனிய உயர்நிலைப் பள்ளிகளான Gymnasium, Realschule போன்றவற்றில் தமது அடிப்படைக் கல்வியைக் கற்றுவருகின்றார்கள். இப்புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது தமிழாலய மாணவர்கள் தமக்குக்கிடைக்கின்ற ஒய்வுநேரங்களில் பெரும்பகுதியை தமிழுக்கும் தமிழ்க்கலை, பண்பாடுகளுக்கும் ஒதுக்கி இரட்டிப்புச் சுமைக்குள் வாழ்ந்தாலும் இறுதியில் வெற்றிபெற்றவர்களாகவும் தமது இன அடையாளங்களை இழக்காதவர்களாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள்.
விழாவில் சிறப்பு நிகழ்வாக தமிழீழக் கல்விக் கழகம் உருவாக்கிய வரலாறு சொல்லும் பாடம் என்ற நூல் 5 அரங்குகளில் வெளியிடப்பட்டது
No comments:
Post a Comment