Saturday, 19 April 2008

சீனாவை சூறாவளி தாக்கியது; 18 மீனவர்கள் கதி என்ன? விமானங்கள் ரத்து; மின்சாரம் துண்டிப்பு

சீனாவை சூறாவளி தாக்கியது. இதனால் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

சூறாவளி தாக்கியது

சீனாவில் கோடை காலங்களில் சூறாவளி தாக்குவது வழக்கம். அதுபோல், நேற்று `நியோகுரி' என்ற புதிய சூறாவளி தாக்கியது.

சீனாவின் தென்பகுதியில் உள்ள ஹைனன் மாகாணத்தில் இந்த சூறாவளி தாக்கியது. இதில் பெருமளவு சேதம் ஏற்பட்டது.

76 விமானங்கள் ரத்து

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹைனன் மாகாணத்தில் வென்சங் நகரில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்நகரம் முற்றிலுமாக செயல் இழந்தது.

சூறாவளி தாக்குதலை அறியாமல், 3 படகுகளில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். சூறாவளியில் சிக்கி அவர்களின் படகுகள் உடைந்து கடலில் மூழ்கின. இதனால் மீனவர்களும் கடலில் விழுந்தனர். இவர்களில் 38 மீனவர்கள் நீந்திச்சென்று, கடலில் உள்ள பவளப்பாறைகளில் போய் அடைக்கலம் புகுந்தனர். அந்த வழியாக சென்ற மீட்பு கப்பல், 38 பேரையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தது.

ஆனால் இந்த மீனவர்களுடன் சென்ற 18 மீனவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

ஏராளமானோர் வெளியேற்றம்

ஹைனன் மாகாணத்தை தாக்கிய சூறாவளி, சற்று வலுவிழந்து குவாங்டோங் மாகாணம் நோக்கி நகர்ந்தது. இதையடுத்து, குவாங்டோங் மாகாணத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைக்குத் திரும்பின. தாழ்வான பகுதிகளிலும், ஆபத்தான வீடுகளிலும் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

உலகம் வெப்பமயமாகி வருவதுதான், இதுபோன்ற சூறாவளி மற்றும் பனிப்புயல், வெள்ளம், வறட்சி போன்றவை உருவாக காரணம் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: