பாகிஸ்தானிடம் இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளவுள்ளது என்று இந்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
தென் ஆசிய ஆய்வு இணையத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பிப்பதற்காக சமிக்ஞையை காட்டியபோது அமைச்சர் உள்ளிட்ட 11 பேர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். வெலிவேரியாவில் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் காயமடைந்தனர்.
மிகப் பெறுமதி வாய்ந்த, உறுதி மிக்க நபராகவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நோக்கப்படுகின்றார். எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் போது அன்னாரது மறைவு ஆளும் கூட்டணி அரசாங்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையக்கூடும்.
மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடனான தொடர்புகள் என்பவற்றின் போது அமைச்சர் ஜெயராஜின் சேவையை மகிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமது கடுமையான கருத்துக்கள் காரணமாக விடுதலைப்புலிகளின் கொலைப் பட்டியலில் ஜெயராஜின் பெயர் முக்கிய இடத்தில் காணப்பட்டது. இந்தப் படுகொலையை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியும்.
09.01.2008 அன்று கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தேச நிர்மாண கட்டமைப்புத்துறை அமைச்சர் டி.எம். தசநாயக்க மீதான குண்டுத்தாக்குதலும் அமைச்சர் ஜெயராஜை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் டி.எம். தசநாயக்க மீதான தாக்குதல் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படுகிறது.
எனினும், இம்முறை கொலையாளியினால் சரியான இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு தடவை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே இலங்கை சுதந்திரக் கட்சியில் முக்கிய உறுப்பினராக கருதப்படுகின்றார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய சில தமிழ் அமைச்சர்களில் ஜெயராஜ் முக்கிய இடத்தை வகித்தார். அரசியல் வட்டாரத்தில் ஒளிவு மறைவின்றி தனது கருத்தை அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆளுமை படைத்த சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.
தனது வலது கையான அமைச்சர் ஜெயராஜின் கொலைச் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகளுக்கு மிகுந்த வாய்ப்பு வழங்க மாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
மன்னார் மடு தேவாலயம், ஓமந்தை, வெலிஓயா மற்றும் முகமாலை ஆகிய பாதுகாப்பு முன்னரங்குகளில் உக்கிரத் தாக்குதல்களை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிடக்கூடும்.
விடுதலைப்புலிகளும், படைத்தரப்பும் போராட்டங்களில் முனைப்புக்காட்ட அதிக சிரத்தையுடனும், தயார் நிலையிலும் இருப்பதாகவே அண்மைய சம்பவங்களின் மூலம் தெளிவாகின்றது.
பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலைச் சம்பவம் இந்தப் போர் முனைப்புக்களை மேலும் சற்று துரிதப்படுத்தும்.
வடகள போர் முனையில் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் மோதல்களுக்கு பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மன்னார், முகமாலை, நாகர்கோயில் மற்றும் வெலிஓயா ஆகிய பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் நீர் நிலைகளுக்கு அருகாமையிலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலைமைகளினால் வான் மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
நீர்நிலைகளில் டெங்கு, சிக்கன்குனியா போன்றவற்றை உருவாக்கும் நுளம்புகள் பரவி வருகின்றன. இந்த நிலைமைகளின் காரணமாக வெலிஓயாப் பகுதியில் படையினர் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுகின்றது.
கடந்த மாதத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான மோதல்களில் இராணுவத்தினர் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரையில் 6,867 தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் நாள் தேசிய பாதுகாப்பு மத்திய நிலைய பேச்சாளர் தெரிவித்தார். படைத்தரப்பில் 1,501 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதி வரை 6,486 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,196 படையினர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் போலியானதாகவோ அல்லது பொதுமக்களின் உயிர்களையும் உள்ளடக்கியதாகவோ இருக்கலாம். வேறும் தகவல்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
எவ்வாறெனினும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இராணுவத்தரப்பு அதிக இழப்புக்களை எதிர்நோக்கியுள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத் தகவல்களின் மூலம் தெளிவாகின்றது.
கடந்த நான்கு வார காலத்தில் 305 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மாத காலப்பகுதியில் 1,196 படையினர்களே கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் 386 தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னொரு போதும் இல்லாத வகையில் இதுவொரு மிகக்குறைந்த விகிதாசாரமாகவே கருத வேண்டியுள்ளது.
இதன்மூலம், முன்னரங்கில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மழையிலும் கூட சூடுபிடித்துள்ள நிலைமையையே காட்டி நிற்கின்றது.
இந்தத் தாக்குதல்கள் உக்கிரமடைய இரு தரப்புக்களினதும் இழப்பு வீதங்கள் மேலும் உயர்வடையக்கூடும்.
பாதுகாப்புப் படைத்தரப்பின் மொத்த எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும் இழப்புக்களின் விகிதம் மிகக் குறைந்த எண்ணிக்கையாகவே காணப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாக மழை சற்று குறைவடைந்துள்ளது. இதன் மூலம் பலமான வான் மற்றும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களுக்கு வழிகோலும்.
இதேபோன்று நில ரீதியிலும் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஏனெனில் படையினர் சகதியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் நிலவுகிறது.
போர்க்களமுனையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதனால் போர்க்களமுனைகள் விரிவடைந்து வருகின்றன. சில நாட்களாகவே படையினர் யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறி வருகின்றனர். விரைவில் புதிய மோதல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளும் புதிய போராட்டத்திற்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். சார்ள்ஸ் அன்ரனி, மாலதி உள்ளிட்ட மூன்று படையணிகள் மன்னார் மடு தேவாலயப் பிரதேசம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினரும் தேவாலய வளாகத்தை போர்ச் சூன்ய பிரதேசமாக மாற்ற இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதாக இரு தரப்பினரும் மற்றைய தரப்பினர் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
பேராயர் அருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உத்தரவிற்கு அமைய மடு மாதா திருச்சொரூபம் கடந்த 4 ஆம் திகதி பாதுகாப்பான பிரதேசமொன்றுக்கு இடம் மாற்றப்பட்டது.
மன்னாரிலிருந்து வன்னிக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மடுப் பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்வது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
இராணுவத்தினருக்கும் மடு பிரதேசத்தைக் கைப்பற்றுவது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
எனவே, இந்தப் பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் கடுமையான போர் முன்நகர்வுகளை மேற்கொள்ளக்கூடும்.
இரண்டு தரப்பினரும் பாரிய மோதல் ஒன்றை நோக்கி முன்நகர்கின்றனர்.
60 மி.மீ. கொண்ட 150,000 மோட்டார்களையும், கைக்குண்டுகளையும் பாகிஸ்தானிடம் இலங்கை உடனடியாக கோரியுள்ளது.
சுமார் 25 மில்லியன் பெறுமதியுடைய மற்றுமொரு ஆயுதத் தொகையொன்றை பாகிஸ்தான் வழங்கவுள்ளது.
மறுபுறத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. குறிப்பாக ஆட்லறிகளுக்கான எறிகணைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எந்த வழியாக விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை கொண்டு வந்தார்கள் என்பது குறித்து இதுவரையில் தெளிவாகவில்லை.
எனினும், இந்து சமுத்திரப் பகுதியிலிருந்தே அநேகமான சந்தர்ப்பங்களில் ஆயுதக் கடத்தல்கள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் காலங்களில் இலங்கை கடற்படையினர் இந்தியக் கடல் எல்லையில் தமது நடவடிக்கைகளை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, கச்சதீவுப் பகுதிகளில் அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். இதனால், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பதற்றம் நிலவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர். ஹரிகரன்
Saturday, 12 April 2008
விரிவடைந்து வரும் போர்க்கள முனைகள் - மடுவை கைப்பற்றுவதிலும் தக்க வைப்பதிலும் இரு தரப்பும் கடும் பிரயத்தனம்
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Those details in this article
nothing new.Its a collection
from all news from government
propaganda mashine.Col Hariharan
is a double from Uthaya nanayakara
War fought on emotional feelings for friends loat and revenge is bound to fail. With all the army and police protection MR could not save the life of his friend from death. MR is no Caesar or Alexander to kill people at his whims and fancies although he may wish to do so. The international conscientious community like AI Fund for Peace are there to stop them by their will power and propaganda. Hariharan can see this from the Kerala coast if not from Rameswaram.
Post a Comment