Monday, 14 April 2008

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வடக்கிலும் தேர்தல் - பஷில் ராஜபக்ஷ

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் தேர்தல் நடத்தப்படும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான எந்த விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க மாட்டார்களென்பதை உறுதிப்படுத்திக் கூறுகிறேன். அவர்கள் தற்போது தெளிவான அரசியலை நோக்கி நகர்ந்து கொள்கின்றனர் எனவே பிள்ளையான் குழு என அவர்களை அழைக்க நான் விரும்பவில்லை. கிழக்கு மாகாண மக்களை அடக்குமுறையிலிருந்து மீட்டவர்களை வெற்றி பெறச் செய்வதா? அல்லது அதற்கெதிரானவர்களை வெற்றிபெறச் செய்வதா? என்பதை கிழக்கு மாகாண மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பாரிய வெற்றியை ரி.எம்.பி. கட்சி தனதாக்கிக் கொண்டது தற்போது அவர்கள் நிதானமான அரசியலை முன்னெடுக்க முனைந்துள்ளனர். அதனை நான் உறுதிப்படுத்துகிறேன். எந்தவிதமான ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ""பிள்ளையான் குழு'' என்ற அடைமொழிப் பிரயோகத்தை நிராகரிக்கின்றேன்.

அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பில் தனிமனிதனின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்கம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்கலாமென்ற உரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க்ததிற்கு மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியுமென்ற சட்டம், அரசாங்கத்தை பலமிக்கதாக்கிவிடும். இது மக்களை நசுக்குவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவேதான் அமெரிக்கவில் தனிமனிதரும் தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்கலாமென்ற உறுதியை வழங்கியுள்ளது. சுயபாதுகாப்பிற்கு ஆயுதம் வைத்திருக்க எமது நாட்டு சட்டம் அங்கீகரிக்கின்றது. ஆனால், அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும். எமது நாட்டின் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்திற்குள் வந்த பின்னர் சரியான பாதையை தெரிவு செய்துள்ளனர். எனவே ரி.எம்.வி.பி. கட்சி ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்ற தென்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பாதுகாப்பு தொடர்பாக ஏதாவொரு அரசியல் கட்சிக்கு பிரச்சினை இருக்குமானால், அனுமதிப்பத்திர முறைக்கமைய ஆயுதங்களை வைத்திருக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் படையினரின் பாதுகாப்பை வழங்க முடியும். கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குகின்றோம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கு பின்னர் அம்மாகான மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியுள்ளோம். சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமையை தோற்றுவித்துள்ளோம். எனவே, மக்கள் மீண்டும் அடக்குமுறையாளர்களை வெற்றி பெறச் செய்வதா அல்லது தம்மை மீட்பவர்களை வெற்றி பெறச் செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் எமது கவனம் வடபகுதி மீது செலுத்தப்பட்டு அங்கும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம். இவ்வருடத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள÷õம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். கிழக்கில் போன்று வடபகுதி மக்களுக்கும் ஜனநாயகத்தை வழங்குவோம்.

No comments: