Monday, 14 April 2008

பிரிட்டன் ரெஸ்டாரன்ட்களில் இனிமேல் சிக்கன் டிக்கா மசாலா கிடைக்குமா ?

லண்டன் : பிரிட்டன் மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடும் ஒரு ஐட்டம் சிக்கன் டிக்கா மசாலா. இப்போது பெரும்பாலான இந்திய ரெஸ்டாரன்ட்கள் இந்த ஐட்டத்தை தங்கள் மெனுவில் இருந்து எடுத்து விட்டார்கள். காரணம் என்னவென்றால் உணவுப்பொருட்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், குடியேற்ற விதிகள் கடுமையாக்கப் பட்டிருப்பதால் சமையல் கலைஞர்கள் கிடைக்காத நிலை இருப்பதால்தான் என்கிறார்கள். சமீபத்தில் பாசுமதி அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பிரிட்டனில் இப்போது குடியேற்ற விதிமுறைகள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே முன்பு போல் இல்லாமல் இப்போது எளிதாக இந்தியாவில் இருந்து அங்கு சமையல் கலைஞர்கள் வர முடியவில்லை. இதனால் பல இந்திய ரெஸ்டாரன்ட்களில் சமையல்காரர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போது சிக்கன் மற்றும் மாட்டிறைச்சி விலையும் அங்கு அதிகரித்திருக்கிறது. அங்கு சர்ரே என்ற இடத்தில் லே ராஜ் என்ற ரெஸ்டாரன்டை நடத்தி வரும் வங்காள தேசத்தவரான ஈனம் அலி என்பவர் இதுபற்றி சொன்ன போது, நான் இங்கு கடந்த 30 வருடங்களாக ஹோட்டல் தொழில் செய்து வருகிறேன். இந்த அளவுக்கு உணவுப் பொருள் விலை உயர்ந்ததை நான் பார்த்ததே இல்லை என்கிறார். அவர் மேலும் தெரிவித்தபோது, கடந்த ஆறு வாரங்களில் மட்டும் இங்கு பாசுமதி அரிசியின் விலை 18 பவுண்டில் இருந்து 32 பவுண்டாக அதிகரித்திருக்கிறது. சிக்கன் விலையும் 25 பவுண்டில் இருந்து 32 பவுண்டாக உயர்ந்திருக்கிறது. இது தவிர நெய், வாசனை பொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்திருக்கிறது. எனவே எங்கள் ரெஸ்டாரன்டில் நாங்கள் சிக்கன் டிக்கா பிரியாணி போடுவதில்லை. சிக்கன் டிக்கா மசாலா மட்டும் போட்டு, விலையையும் 8.50 பவுண்டில் இருந்து 9.50 பவுண்டாக உயர்த்தி விட்டோம் என்றார். அரிசி விலைதான் எங்களுக்குள்ள மிகப்பெரிய பிரச்னை. எங்கள் வாடிக்கையாளர்களில் 99 சதவீதத்தினர் அரிசி சாப்பிடுபவர்கள். அரிசி உணவு போடுவதால் நாங்கள் ஏராளமான பணத்தை இழந்து வருகிறோம். எனவே இப்போது சில அரிசி உணவு வகைகளை நிறுத்தி விட்டோம். இந்த விலை ஏற்றம் கூடிய சீக்கிரம் மாறி விடும் என்று நினைக்கிறோம். எனவே தான் நாங்கள் உணவுப்பொருட்களுக்கு விலை ஏற்றாமல், அளவை குறைத்து விட்டோம் என்றார். பிரிட்டன் அரசு இப்போது கடைப்பிடிக்கும் கடுமையான குறியேற்ற விதியால், அடிக்கடி ரெஸ்டாரன்ட்களில் ரெய்டு நடத்தப்படுவதால், சமையல் கலைஞர்கள் கிடைக்காமல் சுமார் 16,000 இந்திய மற்றும் சீன உணவகங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். பிரிட்டனில் சுமார் 32,000 இந்திய ரெஸ்டாரன்ட்களும் 30,000 சீன ரெஸ்டாரன்ட் களும் இருப்பதாக தெரிகிறது.

No comments: