Saturday, 19 April 2008

கிழக்கு தேர்தலும் வானூர்திச் சேவையின் தடையும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அரசாங்க கட்சி தவிர்ந்த ஏனைய கட்சியினரின் போக்குவரத்துக்கு விமான வசதிகளை செய்து கொடுப்பது தவிர்க்கப்படுவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் விமானங்களும் அங்கு தரையிறக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தயா கமகேவின் தயா ஏவிஹேசன் நிறுவனத்தின் விமானங்கள் தேர்தல் காலத்தில் அம்பாறையில் தரையிறக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயா கமகே குற்றம்சுமத்தியுள்ளார்.

இது ஒரு அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் கூறியுள்ளார், அம்பாறை விமான நிலையத்தின் ஓடுதளத்தை தமது விமான சேவையின் விமானங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வந்தன. ஓடுத்தளத்தில் சிறிய குழிகள் காணப்பட்ட போதிலும் சிறிய விமானங்கள் அதில் தரையிறக்க முடியும்.

தமது விமானங்கள் தரையிறக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான ஒடுத்தளம் புனரமைக்கப்பட வேண்டும். எனினும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த ஓடுத்தளமே பயன்படுத்தப்பட்டது.

ஒடுத்தளத்தை புனரமைக்க கேள்வி பத்திரம் கோரப்பட்டிருந்ததுடன் புனரமைப்பு பணிகள் தமது நிறுவனத்திற்கே கிடைத்தன எனவும் தெரிவித்தார்.

அம்பாறை விமான நிலையத்தின் ஓடுத்தளத்தை இரண்டு மூன்று நாட்களில் புனரமைக்க முடியும் எனவும் அவர் கூறினார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கிழக்கு மாகாண தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்க தற்போதும் விமானங்களை தரையிறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கமகே சுட்டிக்காட்டினார்.

அம்பாறை விமான ஒடுத்தளத்தை பழுதடைந்துள்ளது எனில் அதனை புனரமைக்க வேண்டுமானால், அரசாங்க தரப்பினர் பயன்படுத்தும் பெரிய விமானங்கள் எப்படி அங்கு தரையிறக்கப்படுகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தில் அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர் இரண்டு பெரிய விமானங்கள் மூலம் அம்பாறை விமான நிலையத்தை அடைந்தனர். வை 17 என்ற பெரிய விமானம் மூலமே அமைச்சர்கள் அம்பாறைக்கு சென்றிருந்தனர். எனச் சுட்டிக் காட்டி உள்ளார்.

No comments: