Friday, 25 April 2008

குறுகிய காலத்தில் இராணுவ வெற்றியை ஈட்டும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்தது பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் கருத்து


இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள பாரிய இழப்புகளைத் தொடர்ந்து குறுகிய காலத்திற்குள் இராணுவ வெற்றியை பெறும் அரசின் எதிர்பார்ப்பு தகர்ந்து போயுள்ளது என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தத்திலிருந்து 2007இல் விலகிய இராணுவத் தலைமை, ஆறு மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை அழிக்கப்போவதாக சூளுரைத்தது. புதன்கிழமை ஏற்பட்ட படுதோல்வியானது விடுதலைப் புலிகளை இலங்கை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளதையே புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகளும், ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எதிரியை குறைத்து மதிப்பிடும் கலாசாரத்தையே காணமுடிகின்றது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் "வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவம் தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார். உடனடி இராணுவ வெற்றி குறித்தான கணிப்பீடுகளால் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. அதனால் இராணுவத்தில் பலர் இணைந்து கொண்டனர். எனினும் யுத்த முனைகளிலிருந்து எதிர்மறையான செய்தி வெளியாக தொடங்க படையினரின் எண்ணிக்கை குறைவடைந்ததுடன் தப்பியோடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

முகமாலையில் பாரிய மோதல் இடம்பெறுவதற்கு முதல் நாள் இராணுவம் தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கியிருந்தது. "புதன்கிழமை மோதல் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதாரத்தில் மாத்திரமல்ல, படைக்கு ஆட்சேர்ப்பதிலும் அது பிரச்சினைகளை கொண்டு வரும்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்னமும் 3000 புலிகள் மாத்திரமே உள்ளனர் என்று இவ்வருடம் தெரிவித்துவந்த இராணுவத்தின் தலைமைக்கு இது பாரிய நெருக்கடியாக அமைந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு இவ்வருடத்தில் ஏற்கனவே 3125 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக தெரிவித்தது. எனினும் விடுதலைப் புலிகள் கிழக்கிலிருந்த தமது உறுப்பினர்களை வரவழைத்து வடக்கை பலப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஆய்வாவளர்கள், இராணுவம் தெரிவிப்பது போன்று விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லை என்கின்றனர். யுத்தத்தில் தாம் வெல்லப்போவதாக அரசு மக்களை நம்பவைத்தது "வடக்கில் மூன்று முனைகளை திறந்துள்ள போதிலும், இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் செல்ல முடியாதுள்ளது. பாதுகாப்பு படையினர் தமது அதி உச்ச படைப்பலத்தை பயன்படுத்தி வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அரசு மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுத்தம் வெல்லப்படுவதாக நம்பவைத்துள்ளது' என சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர் ஒருவர், தற்போது அரசினால் அதனை காப்பாற்ற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார். "பொதுமக்கள் இராணுவ நடவடிக்கைக்காக அதிக விலை செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் தியாகம் செய்ய தயாராகவுள்ளனர். இராணுவம் சிறப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், மக்களை நம்பவைத்தது போன்று விடுதலைப் புலிகள் பலவீனமடையவில்லை என்பதை புலப்படுத்துகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் சிறந்த தந்திரோபாயம்
விடுதலைப் புலிகளின் தந்திரோபாயத்திற்கு இராணுவத்தினர் பலியாகிவிட்டனர். இவ்வாறு நடைபெறுவது முதல் தடவையல்ல என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர், விடுதலைப் புலிகள் சிறந்த தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் மிகத் திறமையான தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் இராணுவ தளபதி ஜெரி டி சில்வா, "வடக்கில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் அதேவேளை தெற்கில் தற்கொலைத் தாக்குதலை தடுக்க வேண்டியுள்ளதால் இராணுவம் அகலகால்வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு இதற்கான ஆட்பலம் போதாது' என்று குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பானது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வு சாத்தியமில்லை என்பதை புலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

1 comment:

ttpian said...

mahindha ,time is running out!
stop ur war with tamil community!