தமிழக போலீûஸ உலுக்கி எடுத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், தோண்டத் தோண்ட பூதங்கள் கிளம்புகின்றன.
ஒட்டுக் கேட்பு வேலையில் ஈடுபட்டது போலீஸ் இல்லையென்றும், சென்னையைச் சேர்ந்த தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம்தான் ஒட்டுக் கேட்பில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல், தங்களுக்குப் பிடிக்காத போலீஸ் அதிகாரியை பலிகடாவாக்க உளவுத் துறை முயற்சித்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை தலைவரும், காவல் துறை கூடுதல் தலைவருமான உபாத்யாயாவும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர் எனச் சொல்லி பத்திரிகையில் ஓர் உரையாடல் வெளியானது.
இந்தச் செய்தி சட்டப் பேரவையில் எதிரொலித்தது. முதலில், இதை மறுத்த முதல்வர் பின்னர் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பி. சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு... விசாரணை கமிஷன் தன் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னையைச் சேர்ந்த முன்னணி தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் அரசு அதிகாரிகளின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டு "டேப்' செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசுத் துறைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இந்தத் துறைகளுக்கு "சாப்ட்வேர்' மற்றும் மின்னணுக் கருவிகளை வழங்கும் பணியை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்களில் கம்ப்யூட்டரில் கோளாறு, தகவல்கள் பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தனியார் "சாப்ட்வேர்' நிறுவனங்கள்தான் தீர்த்து வைக்கின்றன.
நமக்குக் கிடைத்த தகவல் படி, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் தமிழக உளவுப் போலீஸ், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்ட போலீஸ், சென்னை நகர போலீஸ், தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி ஆகியவற்றுக்கு "சாப்ட்வேர்' மற்றும் மின்னணுக் கருவிகளை சப்ளை செய்கின்றது.
எந்த மாதிரியான கருவிகள்... வாகனங்கள் எங்கு செல்கிறது என்பதைக் காட்டும் கருவிகள், தொலைபேசி உரையாடலை "டேப்' செய்யும் கருவிகள் உள்பட பல்வேறு நவீன கருவிகளை இந்த தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்கிறது.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில், ""குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் உரையாடல்களை எங்களின் நவீன கருவிகள் மூலம் ஒட்டுக் கேட்க முடியும். சம்பந்தப்பட்ட நபர் லேண்ட்லைன், செல்போன், எஸ்.எம்.எஸ். என எந்த வழியாகப் பிறரைத் தொடர்பு கொண்டாலும் அதை ஒட்டுக் கேட்க வசதி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலிகடாவாக்க முயற்சி... தமிழக உளவுத் துறை போலீஸ் இந்த தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளது. அப்படியெனில், தமிழக அரசு உயரதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது இந்த நிறுவனத்தைத் தாண்டியோ, தெரியாமலோ நடைபெற்று இருக்காது என்பது காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளின் கூற்று.
குறைந்தபட்சம், ஒட்டுக் கேட்பில் தொழில்நுட்ப உதவிகளையாவது தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் வழங்கி இருக்கக் கூடும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
""உளவுத் துறை போலீஸ் உயரதிகாரிகளின் "அன்புக் கட்டளைப்படி' அரசு அதிகாரிகளின் பேச்சை தனது நவீன கருவிகள் கொண்டு தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் "டேப்' செய்துள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் "ஐ பாட்' எனப்படும் அதிக ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய ரெக்கார்டர் மூலம் ஒட்டுக் கேட்ட உரையாடல்களை அளிக்கிறது'' என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரிகள்.
கேள்விக் குறியாகும் நம்பகத்தன்மை: அரசு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை தனியார் "சாப்ட்வேர்' நிறுவனமே ஒட்டுக் கேட்டு "டேப்' செய்துள்ளதாகக் கூறப்படுவது அரசுத் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுக் கேட்பில் தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் ஈடுபட்டது என்பது நீதி விசாரணையில் தெரிய வந்தால், அது நவீன அறிவியலைக் கொண்டு ஒரு மாநில அரசையே ஆட்டிப் பார்த்ததற்குச் சமம் என்பது மட்டும் உண்மை.
பணம் பட்டுவாடா எப்படி? தமிழக போலீசுக்கு உளவு சொல்பவர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கொடுப்பது வழக்கம். இதற்காக, போலீஸýக்கு நிதியும் ஒதுக்கப்படும். இந்தப் பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இந்த காரணத்துக்காக செலவிடப்பட்டது என்று சொன்னாலே போதும். யாருக்கு கொடுப்பட்டது என்கிற தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை.
உளவுப் பிரிவுக்கு தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம் செய்து கொடுத்த வேலைக்கு ஊதியமாக அந்த நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டு இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில உளவுத் துறை இந்தப் பிரச்னையில் தொடர்ந்து தலையிடுவது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர்.
Saturday, 26 April 2008
ஒட்டுக் கேட்பில் தனியார் "சாப்ட்வேர்' நிறுவனம்?: அதிர்ச்சித் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment