Tuesday, 1 April 2008

ஜஹான்கிர், சுசாந்த, நிலந்த ஆகியோரே மூதூரில் தொண்டு நிறுவனப் பணியாளர்களர்களை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை மூதூர் எக்சன் பெய்ம் தன்னார்வுத் தொண்டு பணியாளர்கள் 17 பேரையும் இலங்கையின்; இரண்டு காவல்துறையினரும் ஒரு ஊர்காவல் படையினருமே சுட்டுக்கொன்றதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜஹான்கிர் என்ற ஊர்காவல் படை சிப்பாயும், சுசாந்த மற்றும் நிலந்த ஆகிய காவல்துறையினருமே இந்த 17 பணியாளர்களையும் சுட்டுக்கொன்றதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆண்டு 4 ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைகள் தொடர்பிலான தகவல்களை மூடி மறைக்குமாறு கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மூதூரில் மோதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த 17 தன்னார்வு பணியாளர்களும் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தபோதும் அவர்களின் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி பணியாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் மோதல்கள் முடிவடைந்த பின்னர் காவல்துறையின் உயரதிகாரிகளான சரத் முல்லேரியாவ, மற்றும் சந்தன சேனாநாயக்க ஆகியோர் கொலையாளிகளிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் விசேட படையினருடன் அக்சன் பெய்ம் நிறுவன வளாகத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனப் பார்க்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த கொலையாளிகள் தமது உயரதிகாரிகளிடம் சென்று பணியாளர்கள் அனைவரும் தமிழர்கள் எனப் பதிலளித்துள்ளனர்;. இதனையடுத்து கொமாண்டோக்கள் எக்சன் பெய்ம் நிறுவன வளாகத்தைச் சுற்றிவளைத்த நிலையில், பணியாளர்கள் 17 பேரும் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டனர். இதன்போது தாம் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும் தமது தலைமையகம் கேட்டுக்கொண்டமைக்கு அமையவே தாம் மூதூர் அலுவலகத்தில் தங்கியிருந்ததாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மேலும் அவர்கள் பதிலளிக்கவிடாமல் தடுத்த ஜஹான்கிர், சுசாந்த மற்றும் நிலந்த ஆகியோர் இவர்கள் அனைவரும் புலிகள் எனச் சத்தமிட்டனர். இதன் பின்னர் அவர்கள் மீது குறித்த மூன்று கொலையாளிகளும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பின்னர் மாலை 5 மணியளவில் காவல்துறை மையத்திற்குத் திரும்பிய குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் ஊர்காவல் படை சிப்பாய்க்கும், உயர் காவல்துறை அதிகாரிகளான முல்லேரியாவ மற்றும் சேனாநாயக்க ஆகியோர், வீரர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை வழங்கியதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொலையில் ஈடுபட்ட ஜஹான்கிரின் சகோதரன் ஏற்கனவே தமிழிழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்பதும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலையில் இருந்த உதவி காவல்துறை அதிகாரிகளான ரொஹான் அபேவர்த்தன மற்றும் கபில ஜெயசேகர ஆகியோரின் உத்தரவுக்கு அமையவே இந்த 17 பணியாளர்களும் கொல்லப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜெயசேகர என்ற காவல்துறை அதிகாரியே 17 பணியாளர்கள் கொல்லப்படுதற்கு முன்னர் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் கொலைகளுக்கும் திட்டம் வகுத்தவர் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments: