Monday, 14 April 2008

கத்தோலிக்க திருத்தலம் தாக்கப்படுவது - நியாயப்படுத்தப்பட முடியாதது – அனைத்திந்திய கத்தோலிக்க அவை.

நூற்றுக்கணக்கான அகதிகளை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலத்தைத் தாக்குவது எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது என அனைத்திந்திய கத்தோலிக்க அவை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைகளின் வழி அந்நாட்டின் நிலையான தன்மை அச்சுறுத்தப்படுவதால் இது உலக அமைதிக்கே ஊறுவிளைவிப்பதாக உள்ளது என அனைத்திந்திய கத்தோலிக்க அவையின் தலைவர் ஜான் தயாளின் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராணுவுத் துருப்புக்களால் மடுமாதா திருத்தலம் குண்டு மூலம் தாக்கப்பட்டதும் சொந்த நாட்டிற்குள்ளேயே மடுமாதாவின் திருவுருவம் அகதியாய்ப் புலம் பெயர்ந்துள்ளதும் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஜான் தயாள், இராணுவம் புனிதத் தலங்களைத் தாக்குவதனை இலங்கை அரசு தடுக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார். குறிப்பாக இலங்கையில் அமைதியைக் கொண்டுவர, அரசியல் தீர்வை நோக்கி நடைபோடுமாறு அரசியல் தலைவர்களுக்கு கொழும்புப் பேராயர் ஒஸ்வால்டு கோமஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே மடுத் திருத்தலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் திருஇருதய ஆண்டவர் கோவில் இராணுவத்தின் தாக்குதல்களால்; பெரும் சேதமடைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்படத்தக்கது.

No comments: