Tuesday, 1 April 2008

தாலி பறித்த திருடனை பிடித்து வெளுத்த வீரப் பெண்!!!

சென்னையில் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனைப் பிடித்து சரமாரியாக அடித்து, மிதித்து, உதைத்து வெளுத்தார் ஒரு வீரப் பெண். போக்குவரத்துக் காவலரும், அவரும் சேர்ந்து அந்தத் திருடனை மடக்கினர்.

சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ள தனது அண்ணனை பார்ப்பதற்கு வந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல பிராட்வே பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

பிராட்வே பஸ் நிலையம் அருகே குறுகலான சந்து வழியாக அமுதா சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தான்.

ஆனால் சங்கிலி உறுதியாக இருந்ததால், தாலி அறுபடாமல் உறுதியாக இருந்தது. இதையடுத்து தாலியைப் பறிக்க கொள்ளையன் போராடினான். இதையடுத்து அமுதா உதவி கோரி சத்தம் போட்டார். அப்போது சங்கிலியின் ஒரு பகுதி அறுந்து திருடன் கையில் சிக்கியது.

இதையடுத்து அதைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான் திருடன். இதைக் கண்டு பொங்கி எழுந்தார் அமுதா. கொள்ளையனின் தலைமுடியை பிடித்து தூக்கி தரையில் தேய்த்து சரமாரியாக அடித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த திருடன் நிலை குலைந்து போனான். அத்துடன் நிற்காத அமுதா, கீழே விழுந்த திருடனை சரமாரியாக காலால் மிதித்தார். வலி தாங்க முடியாமல் அலறிய திருடன் விட்டால் போதும் என தப்பி ஓட முயன்றான்.

ஆனால் அமுதாவின் ஆத்திரம் அடங்கவில்லை. திருடனின் சட்டையையும், பேன்ட்டையும் படு கோபமாக கிழித்தெறிந்தார். அவர் போட்ட போட்டில் திருடன் கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டு விட்டும்படி கெஞ்சினான். வலியால் துடித்தான்.

இந்த சமயத்தில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் நாகநாதன் இதைப் பார்த்து வேகமாக ஓடி வந்தார். திருடனை மடக்கிப் பிடித்தார். கையில் வைத்திருந்த தாலிச் சங்கிலியைப் பறிமுதல் செய்தார்.

பின்னர் திருடனை பூக்கடை காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்தனர். தகவல் அறிந்ததும் உதவி ஆணையர் பாலச்சந்திரன் விரைந்து வந்தார்.

திருடனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவன் பிரபலமான சங்கிலித் திருடன் என்பது தெரிய வந்தது. அவனது பெயர் கரண் என்கிற குமார் என்கிற ஆண்டனி குமார்.

இவன் மீது 20க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. கீழ்ப்பாக்கம், வேப்பேரி, பெரியமேடு என பல பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளான். பலரது தாலிச் சங்கிலிகளைத் திருடியவன். குண்டர் சட்டத்தின் கீழும் சிறை சென்றவன்.

இப்படிப்பட்ட பலே திருடனை சற்றும் சளைக்காமல், மகா தைரியத்தோடு போராடி, சரமாரியாக அடித்துப் பிடித்த அமுதாவையும், காவலர் நாகநாதனையும் வட சென்னை இணை ஆணையர் ரவி வெகுவாகப் பாராட்டினார்.

No comments: