Sunday, 13 April 2008

கேரள படகு வீடு, நர்மதாவில் மிதக்கும் 'மது பார்: குஜராத், 'குடி'மகன்களுக்கு குஷி

ஆமதாபாத்: கேரளாவில் படகு வீடுகளாக பயன்படுத்தப்படும் படகுகள், நர்மதா நதியில் மிதக்கும் 'மது பார்' ஆக இயக்கப்பட உள்ளது. மகாராஷ்டிர 'குடி' மகன்கள் மட்டுமல்ல, 'பர்மிட்' இல்லாமலேயே குஜராத் பிரியர்களும் 'குஷி' காணலாம். குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல, சவுகான் குரூப்' நிறுவனம், இதற்கான திட்டத்தை தீட்டியுள்ளது. நர்மதா அணை திட்ட நிர்வாகத்திடம் பேசி, மிதக்கும் 'மது பார்' திட்டத்துக்கு சம்மதம் பெற்றுள்ளது. கேரளாவில் 'படகு வீடு'களாக பயன்படும் ராட்சத படகுகள், 'மிதக்கும் மது பார்' மற்றும் ஓட்டலாக வடிவமைக்கப் பட்டுள்ளன. முதல் கட்டமாக இதுபோன்ற இரு படகுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் 20 அறைகள் கொண்ட ஓட்டல், லாட்ஜ் இருக்கின்றன. மது பரிமாற, உணவு சாப்பிட வசதிகள் உள்ளன; கேளிக்கைகளுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். குஜராத் மாநிலத்தில் நர்மதா நதியின் 25 சதவீத பகுதிகளில் இந்த படகு இயங்கும். மகாராஷ்டிராவில் தான் 75 சதவீத நர்மதா நதி நீரில் படகு செல்லும். ஆமதாபாத்தில் இருந்து 200 கி.மீ.,தூரத்தில் உள்ள கெவாடியா காலனி பகுதியில் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். அங்கிருந்து கிளம்பி, மகாராஷ்டிர பகுதிகளில் சென்று வலம் வரும். இரண்டு நாள் பயணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. பர்மிட் வாங்கித்தான் குடிக்க வேண்டும்.ஆனால், படகில் பயணம் செய்வோர், பர்மிட் இல்லாவிட்டாலும் குடிக்கலாம். இதுகுறித்து சவுகான் கம்பெனி தலைவர் ஹரிசிங்ஜி சவுகான் கூறுகையில்,'நர்மதா நதியில் மிதக்கும் 'மது பார்' விடும் திட்டத்தை 2006 லேயே தீட்டி வைத்திருந்தோம். ஆனால், இப்போது தான் அனுமதி கிடைத்துள்ளது. வரவேற்பை பொறுத்து, இன்னும் ஐந்து மிதக்கும் 'மது பார்' படகுகள் விடப்படும்' என்றார்.

No comments: