விலைவாசி உயர்வை கண்டித்து சேலத்தில் வைகோ கொட்டும் மழையிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். தொண்டர்கள் அமர்ந்திருந்த சாமியானா பந்தல் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் துயரை போக்காத, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சேலம் போஸ் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் போஸ் மைதானத்தில் உண்ணாவிரதத்துக்காக சாமியான பந்தல்போட்ட மேடை அமைக்கப்பட்டும், பெரிய அளவிலான பந்தலும் போடப்பட்டும் இருந்தது. காலை 8.50 மணிக்கு உண்ணாவிரத மேடையில் வைகோ மற்றும் நிர்வாகிகள் வந்து அமர்ந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்கள் சாரை சாரையாக பந்தலில் வந்து அமர்ந்தனர்.
அவர்களை வைகோ மேடையில் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி வரவேற்றார். உண்ணாவிரதம் தொடங்கும் வேளையில் நன்றாக வெயில் கொளுத்தியது. பகல் 1 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. வைகோ இந்த மழையையும் பொருட்படுத்தாமல் மேடையில் அமர்ந்திருந்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் பயிரிடும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்றும், குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும். 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.
மழை பெய்துகொண்டு இருக்கும் வேளையில், தொண்டர்கள் அமர்ந்திருந்த சாமியானா பந்தலின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பின்னர் வைகோ உள்பட அனைவரும் அருகில் உள்ள நேரு கலையரங்கில் சென்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மாலையில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
முடிவில் உண்ணாவிரதத்தை அ.தி.மு.க.மாநில அமைப்பு செயலாளர் சுலோசனா சம்பத் பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். அதன் பின்னர் ம.தி.மு.க. நகர பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார். உண்ணாவிரத முடிவில் வைகோ பேசியதாவது:- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள்.
இதில் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். இதே நிலையை நாமும் கடைபிடிப்பதில்லை. தமிழ்நாட்டில் வாழும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களை நாம் தாக்குவதில்லை. குண்டர்கள் மற்றும் ரவுடிகளை கர்நாடகாவில் வாழும் அரசியல் கட்சி தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தமிழன் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இது தொடர்ந்தால் உங்களுக்கு எதற்கு டெல்லியில் அதிகாரம் என்று நாங்கள் கேட்போம். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்தியா துண்டு, துண்டாக சிதறும் நிலை ஏற்படலாம். இவ்வாறு வைகோ பேசினார்.
Thursday, 3 April 2008
சேலத்தில் கொட்டும் மழையிலும் வைகோ உண்ணாவிரதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment