Thursday 29 May 2008

யாழ் கடற்பரப்பில் கடற்படையினர் விடுதலைப் புலிகள் மோதல்- 6 பொதுமக்கள் பலி 13 பேர் காயம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகள் யாழ்ப்பாணம் கரையோரப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக யாழ் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு யாழ்ப்பாணம் சிறுத்தீவில் கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகள் யாழ்ப்பாணம் பாஷையூர், குருநகர், கொழும்புத்துறை, ஈச்சமோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 2 பேருடைய சடலங்கள் மாத்திரமே யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 9 வயதுச் சிறுவன் உட்பட 13 பேர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் உள்ளடங்குவதுடன், கொல்லப்பட்டவர்களில் பெண் ஒருவரின் சடலமும் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதல்களில் கடற்புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டிருப்பதுடன், 15 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய மோதல்களில் கடற்படையினரின் சிறுத்தீவு முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டிருப்பதாகவும், ஆயுதங்கள் பல மீட்கப்பட்டிருப்பதாகவும் தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: