உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் போதிய உணவின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இராசலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
“உணவுப் பொருள்கள் உட்பட ஏனைய பொருள்களின் விநியோகம் 80 வீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு போதியளவு உணவுப் பொருள்களை வழங்கமுடியாதுள்ளது” என மாவட்ட செயலாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார்.
உணவுப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றபோதும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் 12,000 பேருக்கு உலக உணவுத் திட்டத்தின் ஊடாகவும், ஏனைய 17,000 பேருக்கு இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
“அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவுப் பொருள் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படமுன்னர் கிளிநொச்சிக்கு 200-300 லொறிகளில் பொருள்கள் எடுத்துவரப்பட்டன. எனினும் தற்பொழுது 50 லொறிகள் மாத்திரமே வருகின்றன” எனக் குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்.
உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. “எனினும், அவ்வாறு வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை. நிவாரணப் பொருள்களை ஒரு வாரத்துக்கே மக்கள் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்கள். எனினும் தற்பொழுது அவர்கள் ஒரு மாதத்துக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது” என்றார் அவர்.
உணவுப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான்விடுத்த வேண்டுகோளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லையென பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் கூறினார்.
எனினும், கிளிநொச்சியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக எந்தவொரு அறிக்கையையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
“அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் இவ்வாறன குற்றச்சாட்டுக்கள் முற்றாகத் தவறானவை” என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி. செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
உணவுப்பற்றாக்குறை தொடர்பாக மாவட்ட செயலாளர் எமக்கு இன்னமும் அறிவிக்கவில்லை. தேவைப்பாட்டால் தேவையானளவு உணவுப் பொருள்களை அரசாங்கம் அனுப்பிவைக்கும் என்றார் அமைச்சர்.
No comments:
Post a Comment