Saturday 31 May 2008

வாயை கவனமாக வைத்துக் கொள் என பாதுகாப்பு செயலரை ஜனாதிபதி எச்சரித்துள்ளார்

mahintha-brathersa.JPGஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, அவர்கள் அச்சுறுத்தப்படுவது மற்றும் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு, அவற்றை தடுக்க வேண்டும் என நேற்று ஜனாதிபதியை சந்தித்த ஊடக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

த நேசன் பத்திரிக்கையின் இணையாசிரியர் கீத் நோயார் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டமை, சக்தி மற்றும் சிரச ஊடகங்களின் யாழ்ப்பாண செய்தியாளர் பி.தேவகுமாரன் மிலேச்சத்தனமாக வெட்டி கொலை செய்யப்பட்டமை

மற்றும் லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்களான சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளாரின் அலுவலத்திற்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை போன்ற தொடர்ந்து இடம்பெற்று வரும் அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கமும், காவல்துறையினரும் குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்காத நிலையில்

ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் மரண அச்சுறுதல் குறித்து இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லங்காதீப நாளிதழ் மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்களான சிறி ரணசிங்க, ஆரியனந்த தொம்பகஹாவத்த ஆகியோரின் தனிப்பட்ட முயற்சியை அடுத்தே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு நடந்துள்ளது.


குறிப்பாக நேசன் பத்திரிக்கையின் இணையாசிரியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் லலித் அழககோனுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் த நேசன் பத்திரிக்கையின் ஆசிரியர் லலித் அழககோனும் கலந்துகொண்டுள்ளார்.


இதன் போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக ஆசிரியர்கள் அச்சமின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தேவை எனில் நேசன் பத்திரிக்கை ஆசிரியருக்கு பாதுகாப்பு வழங்க தயார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.


எனினும் காவல்துறையினர் சகல பயணங்கள் குறித்தும் பதிவு செய்வதால், அது அழககோனுக்கு தடையாக அமையுமோ தெரியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தான் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றம்சுமத்தியதுடன், வாயை கவனமாக வைத்துகொள் என எச்சரித்தாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


இந்த நிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் தேவகுமாரன் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அது குறித்து ஜனாதிபதி கருத்து கூறும் முன்னரே, ஒரு ஊடக ஆசிரியர் அது ஈ.பீ.டி.பியின் வேலை என தெரிவித்ததாகவும் இதனையடுத்து ஜனாதிபதி தலையை ஆட்டிய நிலையில், தேவகுமாரன் தொடர்பில் எதனை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கீத் நோயாரை கடத்திச் சென்று தாக்கியது யார் என்பது தொடர்பில் நேரடியாக சுட்டிக்காட்ட முடியாதுள்ளதாகவும் விசாரணைகளில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் ஊடக ஆசிரியர்களான சிறி ரணசிங்க, ஆரியனந்த தொம்பகஹாவத்த, சுந்தர நியத்தமஹான டி மெல், உபாலி தென்னகோன் மற்றும் லலித் அழககோன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர், பசில் ராஜபக்ஸவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:global tamil news

No comments: