Saturday, 31 May 2008

சிங்கப்பூரில் ஆசியப் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு

உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான புதிய கொள்கைகளை வகுப்பதற்கும் தீர்வுகளை கண்டறிவதற்குமாக ஆசிய, பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று வெள்ளிக் கிழமை சிங்கப்பூரில் ஒன்று கூடினர்.

27 தூதுக் குழுக்கள் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டன.

2002 இல் இதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் உபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் இந்தப் பேச்சுவார்த்தையை ஒழுங்கு செய்திருந்தது. இந்த ஏற்பாடானது ஐரோப்பிய, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு களமாக பின் விரிவுபடுத்தப்பட்டது.

நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டினை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

இன்று சனிக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேற்ஸ் உரையாற்றவுள்ளார். சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், மியன்மார் சூறாவளி தொடர்பாகவும் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

1958 இல் உருவாக்கப்பட்ட உபாயக்கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவும் நேற்றாகும்.

ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கான சவால்கள், கிழக்கு ஆசியாவின் எதிர்காலப் பாதுகாப்பு, பிராந்தியத்தின் சக்தி வளத்தை பாதுகாத்தல் என்பன போன்ற விடயங்களும் இங்கு ஆராயப்படவுள்ளன.

இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், புரூனை, கம்போடியா, கனடா, சீனா, கிழக்குத்திமோர், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேட்டோ, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென்கொரியா, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுக் குழுக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன

No comments: