Saturday 31 May 2008

இண்று நடேசன் நினைவு தினம் - ஜரோப்பாவில் அஞ்சலி செலுத்த மறுக்கும் சந்தர்ப்பவாத பத்திரிகையாளர்கள்.

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது.

2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது.

விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

ரிச்சார்டீ சொய்சா முதல் நிமலராஜன், நடேசன், சிவராம், ரஜிவர்மன், ரேலங்கி செல்வராஜா, றமேஸ்நடராஜா, பாலநடராஜஐயர், சுகிர்தராஜன் சம்பத் லக்மால் என நீண்டு இறுதியாக மே28 ஆம் திகதி தேவகுமாரன் என 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இலங்கை பலிகொண்டிருக்கிறது. சில ஊடகவியலாளர்கள் காணமல் போனவர்களாகவே உள்ளனர்.

2005 ஆம் ஆண்டின் பின் மே 31 2008 வரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இப்போ யாழ் குடாநாட்டில் ஊடகத்துறையின் பக்கம் தலைவைத்து படுக்கக் கூட ஊடகத்துறையினர் பயப்படுவதாக ஒரு ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கு மட்டும் அல்ல இலங்கையின் எப்பாகத்திலும் இன்று ஊடகத்துறை தனது பணியை சுதந்திரமாகச் செய்ய முடியாதவாறு அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆரசாங்கத்திற்கு சார்பான திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி எழுதாளரின் பேனாகூட பாதுகாப்பு குறித்து எழுத வேண்டாம் என்ற கட்டளைக்கு உட்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்களில் 20ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள். பலர் உள்நாட்டிலேயே மௌனமாக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் வேறு தொழில்களை நாடிச் சென்று விட்டனர். குறிப்பாக இலங்கையில் தமிழ் ஊடகத்துறையின் உயிர் மூச்சு நின்றுவிடும் கட்டத்திலேயே உள்ளதென்பதனை எவரும் மறுக்க முடியாது.

No comments: