Saturday 31 May 2008

எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் பஸ் போக்குவரத்திலிருந்து விலக நேரிடும் - பஸ் சங்கத் தலைவர் மிரட்டல்

எதிர்வரும் நாட்களில் மீண்டுமொருமுறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் போக்குவரத்திலிருந்து விலக நேரிடும் என தனியார் பஸ் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை போக்குவரத்திற்கு உரிய பொறிமுறையொன்று உருவாக்கப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாவ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒன்றிணைந்த பஸ் சேவையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும், இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

26ம் திகதி நள்ளிரவுடன் பஸ் கட்டங்கள் 27.2 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாகவும், இது பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பஸ் போக்குவரத்துக்கு மாற்றீடாக வேறு போக்குவரத்து சேவையை பொதுமக்கள் நாடக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து எரிபொருளில் விலையேற்றம் ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து சேவையிலிருந்து நிச்சயமாக விலகிக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் நேர அட்டவணைக்கு அமைய சில பிரதேசங்களில் தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதகாவும், எதிர்காலத்தில் நாடு முழுவதும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: