Saturday, 31 May 2008

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்திக்கிறது

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீடத்திற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் எதிர்வரும் 6ஆம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததையடுத்தே, ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு இடம்பெற்ற வன்முறைகளுக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தொடர்பிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தவே ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராயப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: