அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டம் அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் - சிங்கள புதுவருட காலத்தில் சில பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கப்பட்டன. இதன் பின்னணியில் மக்களை வீதிக்கு இறக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் சதிமுயற்சியே இருந்தது. மக்கள் வீதிக்கு இறங்கும் பட்சத்தில் வடக்கில் இருக்கும் படையினர் தெற்கிற்கு அழைக்கப்படுவர் என்று சதிகாரர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடம்கொடுக்காது. மக்களுக்கு எது தேவையோ அதனையே இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலேயே விலைவாசி அதிகரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். அதில் எவ்வித உண்மையும் இல்லை. உலகமே இன்று எரிபொருள் விலை அதிகரிப்பாலும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டாலும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எனவே யாருடைய ஆட்சி இப்போது இருந்தாலும் எரிபொருள் விலையையோ அல்லது உணவுப் பொருட்களின் விலையையோ குறைத்துவிட முடியாது என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா கூறியதாவது:
எரிபொருள் விலையை கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி சிறுபிள்ளைத்தனமான பிரசாரத்தை மேற்கொள்கின்றது. மகிந்தவின் ஆட்சியில் 13 ஆவது தடவையாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது மக்களை தவறாக வழிநடத்தும் பிரசாரம் ஆகும்.
எரிபொருள் விலை அதிகரிப்பு என்று கூறிக்கொண்டு கொழும்பில் மாட்டு வண்டில் சவாரி நடத்துகின்றனர். இந்த சவாரியை மேற்கொண்டு அவர்கள் ஒவ்வொரு நாளும் தமது கடமைகளை நிறைவேற்றினால் அது பயனுள்ளதாக இருக்கும்.
ஊடகவியாளர் எவரிடமும் கோத்தபாய ராஜபக்ச விசாரணை நடத்த முடியும். அதற்குரிய அதிகாரம் அவருக்கிருக்கின்றது. அவர் அதற்காக யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என்றார்.
No comments:
Post a Comment