இலங்கை மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக வவுனியா, மன்னார் மற்றும் மதவாச்சி சோதனைச் சாவடிகளுக்கு அப்பால் சுதந்திரமான நடமாட்டம் குறைக்கப்பட்டிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பயணத்தடைகளை ஏற்படுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கின்றபோதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு ஒருதலைப் பட்சமான தடைகளை ஏற்படுத்த முடியாதென மனிதநேய அமைப்புக்களின் இணையம் அறிவித்துள்ளது.
மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்பவர்கள் முற்றுமுழுதாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றபோதும் மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக தமது சொந்த வாகனங்களில் பயணிப்பதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயர் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்பாடு கடைப்பிடிக்கப்படுவதாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் தெரிவித்துள்ளது.
“இதற்கு மேலதிகமாக சோதனைச் சாவடிகளைவிடவும் மேலும் பல இடங்களில் பயணிகள் இறக்கி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் பாரிய நேரச் செலவு ஏற்படுவதுடன், சிலர் கைதுசெய்யப்படுகின்றனர்” என மனிதநேய அமைப்புக்களின் இணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உதாரணமாக வவுனியாவிலிருந்து புறப்படும் பயணிகள் முதலில் வவுனியா பேரூந்து நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இரண்டாவதாக ஈரப்பெரியகுளத்திலும், மூன்றாவதாக மதவாச்சியிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பயணிகள் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்வரை பயணிகள் காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளது என அந்த இணையம் தெரிவித்துள்ளது.
மதவாச்சியிலிருந்து பிறிதொரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே பயணத்தைத் தொடரவேண்டியிருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment